தூய நீருக்குத் தொண்டூழியம்

தூய நீருக்குத் தொண்டூழியம்

2 mins read
a2fa0a57-bfb0-4234-9d9a-8d38f39a9eee
-

சிங்கப்பூர் அனைத்துலக அறநிறுவனம் (எஸ்ஐஎஃப்) கம்போடியா நாட்டின் கிராமப்புறங்களுக்குச் சுத்தமான நீர் வழங்கும் முயற்சியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு வருகிறது.

இதற்கான 'வாட்டர் ஃபார் லைஃப்' எனும் திட்டத்தின் மூன்றாவது கட்டம் அண்மையில் சியாம் ரீப் கிராமப்புறங்களுக்காகத் தொடங்கப்பட்டது. இத்திட்டம் 2010-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

"சுத்தமான தண்ணீர் ஒவ்வொரு மனிதனின் அடிப்படை உரிமை. அதை வழங்குவதற்கான இம்முயற்சியால் கம்போடிய மக்களின் வாழ்க்கைமுறை மேம்பட்டுள்ளது," என்றார், பத்து ஆண்டுகளாக இத்திட்டத்தில் தொண்டூழியராகப் பணிபுரிந்து வரும் திரு சுந்தரம் நாகலிங்கம்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் 160 தொண்டூழியர்களைக் கொண்டு சௌட் நிக்கோம், சீ கிரெங் ஆகிய மாவட்டங்களின் கிராம வீடுகளில் 600 நுண்ணுயிரி-மணல் நீர் வடிகட்டிகள் நிறுவப்படும். இதனால் மேலும் 5,700 கிராமவாசிகளுக்குச் சுத்தமான குடிநீர் கிடைக்கும் என்று கூறப்பட்டது.

அசுத்த நீரை இந்த நீர் வடிகட்டிகளில் ஊற்றும்போது, அது இரண்டு அடுக்குகளாக அமைக்கப்பட்டிருக்கும் கூழாங்கற்களைக் கடந்து சுத்தமான நீராக வெளியாகிறது. நிமிடத்திற்கு 400 மில்லி லிட்டர் வேகத்தில் இந்த வடிகட்டி நீரைச் சுத்திகரிக்கிறது. இதில் அதிகபட்சம் 12 லிட்டர் அசுத்த நீரை ஊற்றலாம். ஊற்றப்பட்ட மொத்த அசுத்த நீரும் அதிகபட்சம் ஒரு மணி நேரத்திற்குள் சுத்தமான நீராக வெளியாகும்.

ஏழ்மையில் தவிக்கும் கம்போடிய மக்களுக்கு அசுத்த நீரால் ஏற்படும் மருத்துவ சிக்கல்களை இந்த வடிகட்டிகள் குறைக்க உதவுகின்றன. அதனால், அவர்களின் செலவு குறைந்து, வாழ்க்கை தரம் உயர அவை வழிவகுக்கின்றன.