தேடித் தேடிப் பொங்கல் விழாபற்றி மகளிடம் விளக்கும் தாயார்

தேடித் தேடிப் பொங்கல் விழாபற்றி மகளிடம் விளக்கும் தாயார்

2 mins read
800fc718-c998-4078-9f1d-65cb48ac5ba1
-

சின்ன வயதில் அம்மா செய்யும் பொங்கலைச் சாப்பிடுவார். அதற்குமேல் பொங்கல்பற்றி எதையுமே நிஷா யோசிப்பதில்லை. இப்போது மகள்களுக்காகத் தமிழர் பண்பாடு, பாரம்பரியம்பற்றித் தேடித் தேடித் தெரிந்துகொள்கிறார் இந்த 32 வயது இளம் தாய்.

"சின்ன வயதிலேயே பிள்ளைகளுக்கு விளக்கத்தோடு சொல்லிக் கொடுக்காவிட்டால் தொடர்ச்சி இல்லாமல் போய்விடும். நான் சின்ன வயதில் எதையும் தெரிந்துகொள்ளவில்லை. ஆனால், இப்போது பிள்ளைகள் எல்லாவற்றுக்கும் ஏன், எதற்கு என்று கேள்வி கேட்கிறார்கள். 6 வயது தான்யா, 3 வயது கியாரா இருவரும் கான்வென்ட் பள்ளியில் படிக்கிறார்கள். அங்கு அவர்கள் தெரிந்துகொள்பவை வேறு, வீட்டுப் பழக்கங்கள் வேறு. நமது பண்பாட்டையும் தனித்துவத்தையும் அவர்களுக்குச் சொல்லித் தருவது இன்றைய காலக்கட்டத்தில் முக்கியம் என நினைக்கிறேன்," என்று நிஷா கூறினார்.

வீட்டில் ஆங்கில மொழியில் அதிகம் பேசினாலும், பிள்ளைகளுக்குப் 'பொங்கலோ பொங்கலோ' என்று சொல்லக் கற்றுக் கொடுத்துக் குடும்பத்துடன் பொங்கல் விழாவைக் கொண்டாடினார் நிஷா.

பொங்கல் நன்றி சொல்லும் திருநாள். விவசாயி, சூரியன் இல்லாவிட்டால் நமக்கு உணவு கிடைக்காது என்று மகள்களுக்குப் புரியும் வகையில் நிஷா சொல்லித் தந்துள்ளார்.

இன்று காலை ஆறு மணிக்கெல்லாம் பொங்கல் வைத்து, சூரியனை வணங்கிவிட்டுத்தான் ஒன்றாம் வகுப்பில் படிக்கும் தான்யா பள்ளிக்குச் சென்றார். உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளரான கணவர் சண்முகமும் காலையில் விடுப்பு எடுத்திருந்தார்.

"மற்றவர்கள் பொங்கல் வைக்கிறார்கள் என்பதற்காக நான் பொங்கல் வைப்பதில்லை. ஏன், எதற்கு என்பதைப் புரிந்து செய்கிறேன். பிள்ளைகளுக்கும் கணவருக்கும் சொல்லி விளக்குகிறேன்," என்றார் நிஷா.