திருமதி கவிதாவுக்கு குழந்தைகளுக்காகத் தமிழ்க் கதைகள் சொல்லவேண்டும் என்ற ஆவல் நீண்டகாலமாய் இருந்தது. தாத்தா பாட்டிகளிடம் கதை கேட்டு வளர்ந்த அவர், அந்த அனுபவங்களை இக்கால பிள்ளைகளுக்கு அளிக்கவேண்டும் என்று எண்ணினார். தனது இரு பிள்ளைகளுக்குமே, வளரும் காலத்தில் அவர் கதைகள் சொல்ல முடிந்ததில்லை. நேரப் பற்றாக்குறையும், பரபரப்பான வாழ்க்கைமுறையுமே இதற்கு காரணம். இக்குறையைத் தீர்ப்பதற்கு, 'கவிதா அத்தை குட்டீஸ் கதைகள்' என்ற தனது சொந்த யூடியூப் ஒளிவழியை அவர் தொடங்கினார்.
தொடங்கிய சில காலத்திலேயே, திருமதி கவிதாவின் கதைகள் பிரபலமாயின. குழந்தையாகவே மாறி குதூகலத்துடன் கதை சொல்லும் கவிதா அத்தைக்கு ரசிகர்கள் ஏராளம். பிள்ளைகளை ஈர்க்க, ஒப்பனை, காணொளிப் பதிவு, படத்தொகுப்பு, வசனம் எழுதுவது ஆகியவற்றில் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.
திருமதி கவிதாவின் பிள்ளைகளும் இவருக்குப் பல வழிகளில் உதவினர். தமது மூத்த மகனின் வழிகாட்டுதலில் யூடியூப் தளத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்று அவர் கற்றுக்கொண்டார். பின்னர், தாமாகவே காணொளிகளைப் பதிவேற்றம் செய்யத் தொடங்கினார்.
"தொடர்ந்து கதை சொல்வதற்கு என்னை ஊக்குவிப்பவர்கள் காணொளியைப் பார்க்கும் பிள்ளைகளும் அவர்களின் பெற்றோரும்தான். 'ஐ கவிதா அத்தை!' என்று பிள்ளைகள் செல்லமாக ரசிப்பது எனக்கு மனநிறைவைத் தருகின்றது," என்றார் திருமதி கவிதா.
கதைகளுக்குப் பஞ்சமே இல்லை என்றாலும், கதை சொல்பவர்கள் குறைவாக இருப்பதைத் திருமதி கவிதா சுட்டினார். வாசிப்புப் பழக்கம் குறைந்துவிட்ட சூழலில் தம்மைப் போன்றவர்களின் எளிமையான முயற்சிகள் பிள்ளைகளைத் தமிழ்மொழியின்பால் ஈர்க்கும் என்று அவர் தெரிவித்தார்.

