சிங்கப்பூர்த் தமிழர்களின் செழிப்புமிக்க வரலாறு

2 mins read
e790bba8-c0d6-4467-b27c-2eabe3e1b06d
-

சர் ஸ்டாம்ஃபர்ட் ராஃபிள்சுடன் சிங்கப்பூரில் காலடி வைத்த நாராயண பிள்ளைபற்றி எல்லாருக்கும் தெரியும். ஆனால், அவர் தோற்றத்தில் எப்படி இருப்பார் என்று தெரியாது. கற்பனை கலந்த சிற்பங்களால் மட்டுமே அவர் எப்படி இருப்பார் என்பதை அறிகிறோம்.

இத்தகைய முக்கிய மனிதர்களின் விவரங்கள் கிடைக்காமல்போனது எதனால், தங்களது வரலாற்றை அவர்கள் எவ்வாறு எழுதி இருப்பார்கள் எனப் பல கேள்விகள் வரலாற்று ஆய்வாளர் குமாரி நளினாவிடத்தில் இருந்தன. அவை, இவரது வரலாற்று ஆய்வுப் பயணத்திற்கு ஊக்கம் கொடுத்து வருகின்றன. இத்துறையில் 18 ஆண்டுகள் அனுபவமும் பெற்றுள்ளார் குமாரி நளினா கோபால்.

சிங்கப்பூரில் முதன்முறையாக தெற்காசிய வரலாற்று ஆய்வு மற்றும் அரும்பொருளகம் குறித்த ஆலோசனையை வழங்கும் சேவையைத் தொடங்கியுள்ளார் குமாரி நளினா. 'அந்தாதி' என்ற பெயர்கொண்ட இந்த நிறுவனம், 2022-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.

முதலில், இந்தியாவில் உள்ள ஓர் அரும்பொருளகத்தில் ஆய்வாளராக இருந்தார் குமாரி நளினா. சிங்கப்பூர் வந்ததன் பின்னர், அவர் இந்திய மரபுடைமைக் கழகத்தை வடிவமைப்பதிலும், தகவல்களைத் தேடித் திரட்டுவதிலும் பங்காற்றினார். இவ்வழியில், சிங்கப்பூர்த் தமிழர்களின் வரலாற்றை மீட்டெடுப்பதில் முக்கியப் பணியாற்றி உள்ளார் அவர்.

தமது பயணத்தில் சிங்கப்பூர் இந்தியர்கள், தமிழர்கள் ஆகியோர் குறித்த அரிய வரலாற்றுத் தகவல்களைக் கண்டறிந்துள்ளார் குமாரி நளினா. 'ஊர் திரும்பியவர் வேர் ஊன்றியவர்: தென்கிழக்காசியாவிலும் சிங்கப்பூரிலும் தமிழர் (Sojourners to Settlers)' நூலின் இணை ஆசிரியராக அவர் செயல்பட்டார். இந்த நூல், தென்கிழக்காசியா மற்றும் சிங்கப்பூர்த் தமிழர்களின் வரலாற்றைப் பதிவுசெய்தது.