மூத்தோர்வழி வந்த பற்று, தமிழாசிரியர் ஆவதற்கு வித்து

மூத்தோர்வழி வந்த பற்று, தமிழாசிரியர் ஆவதற்கு வித்து

2 mins read
5b57b7af-ef5a-478c-b4dd-309a1a81876d
-

தொடக்கப்பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்தே தாத்தா, பாட்டியுடன் வளர்ந்தவர் பாவனா. சிறு வயதிலேயே அவர்களுடன் தமிழ்மொழியில் அவர் பேசிப் பழகினார்.

தாத்தாவுக்குத் தமிழ்ப் புத்தகம் படிப்பதிலும் தமிழில் எழுதுவதிலும் அதிக ஆர்வம் இருந்தது. அதனால், பாவனாவுக்கு வீட்டுப்பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களை அவர் தீர்த்து வைப்பார்.

அந்த ஆரம்ப வழிகாட்டுதலால் இன்று 19 வயது ரா.பாவனா, கல்வி அமைச்சின் கற்பித்தல் உபகாரச் சம்பளத்தைப் பெற்றுள்ளார். தமிழ் ஆசிரியராகும் அவரது இலக்கை இன்னும் சில ஆண்டுகளில் அவர் அடையவுள்ளார்.

தொடக்கப்பள்ளி பருவத்திலிருந்து தமிழ்ப் போட்டிகளில் பங்குபெற்று வந்த பாவனா, விக்டோரியா தொடக்கக் கல்லூரிக்குச் சென்றார். அங்கு அவர் தமிழ்மொழி பாடம் பயிலவில்லை. என்றாலும், தமிழ்மொழி தமது அன்றாட வாழ்வில் இடம்பெறுவதாகக் கூறினார்.

ஒரு செயலைச் சிறப்பாகச் செய்து முடிக்க வேண்டும்; எப்போதும் விடாமுயற்சியுடன் முன்னேற்ற பாதையில் நடைபோட வேண்டும் என்பது பாவனாவின் கொள்கைகள். அவற்றுக்கு ஏற்ப ஆசிரியர் பணி விளங்கும் என்று இவர் நம்புகிறார்.

தற்போது தேசிய கல்விக் கழகத்தில் கல்வி, தமிழ்மொழி துறை சார்ந்த பட்டப்படிப்பைப் பாவனா மேற்கொள்கிறார். தொழில்நுட்ப அம்சங்களைப்பற்றி ஆழமாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும், அதைக் கொண்டு பாடங்களை விறுவிறுப்பான முறையில் கற்பிக்கவேண்டும் என்றும் அவர் ஆர்வமாக உள்ளார்.

மற்றப் பாடங்களுடன் ஒப்பிடுகையில், தமிழ்ப் பாடங்களில் தொழில்நுட்பப் பயன்பாடு சற்றுக் குறைவாக உள்ளது எனக் கருதும் பாவனா, மாணவர்களிடையே கற்றல் ஆர்வத்தைத் தூண்ட தொழில்நுட்பம் அதிகம் உதவும் என்று நம்புகிறார்.