அண்ணன் தங்கையான மத்தாயஸ், குவெனத் இருவருக்கும் தமிழ்மொழி பிடித்தமான ஒரு பாடம். முதலில் தந்தை திரு குவான் பேசும் சீனமொழியைப் அவர்கள் பயின்றனர். ஆனால், சீனம் கற்பது மிக கடினமாக இருந்ததைத் தொடர்ந்து, தமிழ்மொழியின்மீது அவர்கள் ஆர்வம் கொண்டனர். இயல்பாகவே தமிழ்மொழியைக் கற்க விரும்பிய இருவருக்கும், தாயார் திருமதி டெப்ரா தமிழை அறிமுகப்படுத்தினார்.
தமிழில் நூல்கள் படிப்பதும், சிறுவர் பாடல்களைக் கேட்பதும் ஏழு வயது மத்தாயஸுக்கும் நான்கு வயது குவெனத்துக்கும் பொழுதுபோக்குகளாகிவிட்டன. தமிழ்மொழி கற்றலில் அவர்கள் விரைவாக முன்னேறியது, தமக்கும் கணவருக்கும் மகிழ்ச்சி அளித்ததாகக் கூறினார் திருமதி டெப்ரா.
இரண்டாம் மொழி என்பது நமது அடையாளத்துக்கு அவசியம் என்று நம்பிய கணவர் திரு குவான், பிள்ளைகளுக்குத் தமிழ் கற்பிப்பதை ஆதரித்தார். அதே சமயம், சீன கலாசார கூறுகளையும் பிள்ளைகள் அறிந்து வருகின்றனர். சீன, தமிழ் பண்டிகைகளை இக்குடும்பத்தினர் ஒன்றாகவே கொண்டாடுகின்றனர்.
திருமதி டெப்ராவுக்கு இளமையில் தமிழ்ப் புத்தகங்களே பிடிக்காது. கட்டாயப் பாடமாக மட்டுமே அவர் தமிழைக் கற்றார். இப்போதெல்லாம், பிள்ளைகள் நூலகத்துக்குச் செல்லும்போது, தாமாகவே முன்வந்து தமிழ்ப் புத்தகங்களை இரவல் பெறுகிறார்.
வீட்டில் பெரும்பாலும் ஆங்கிலம் பேசுவதால், பேச்சுத்தமிழ் கற்பதற்கு முன்னர் வாய்ப்பில்லை என்றார் திருமதி டெப்ரா. அதனால், ஆங்கிலத்தைக் குறைத்துக் கொண்டு பேச்சுத்தமிழில் பேசத் தாம் முயன்று வருவதாகவும் அவர் கூறினார்.
"நானே தமிழில் பேசும்போதுதான் அவர்களும் தமிழில் தொடர்ந்து ஆர்வம் காட்டுவர் என்று நம்புகிறேன்," என்றார் திருமதி டெப்ரா.

