மொழி கற்றலில் தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதில், 'ஏஐ' எனப்படும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமும் அடங்கும்.
'ஐ2ஆர்' எனும் ஏஐ தொழில்நுட்ப சாதனம், நம் வாசிப்பை மதிப்பிடுகிறது. இது நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. தமிழ், மலாய் மொழி பேசுபவர்களுக்குப் பயன்படும் இச்செயலி, உச்சரிப்பைச் சரிபார்ப்பதோடு, பேசுவதில் உள்ள சரளத்தையும் கண்காணிக்கிறது.
தமிழ்ச் சொற்களை எப்படிச் சரியாக உச்சரிக்க வேண்டும் என்பதையும் இந்தத் தொழில்நுட்பம் விளக்கும். வாசிப்பவர்கள் தவறான இடங்களில் நிறுத்தினால் அல்லது தடுமாறினால், அவற்றையும் இந்தச் செயலி கண்டுபிடித்துவிடும். இந்த இரண்டையும் பொறுத்து, அது வாசிப்பவருக்கு மதிப்பெண்களை வழங்குகிறது. இதன்மூலம், வாசிப்பவருக்குத் தமது தவறுகளைக் கண்டறிந்து திருத்திக்கொள்வதற்கு இது வாய்ப்பு அளிக்கின்றது.
இந்தத் தொழில்நுட்பத்துக்குத் தேவையான பயிற்சி அளிக்க, பிள்ளைகளின் குரல் பதிவுகள் தேவைப்பட்டன. பிள்ளைகளின் குரல், பெரியவர்களின் குரலைவிட மாறுபட்டு இருக்கும். அவர்கள் பேசுவதைப் புரிந்துகொள்வது இந்தத் தொழில்நுட்பத்திற்கு மேலும் சிரமமாக இருந்தது. இந்தச் சவாலைச் சமாளிக்க, உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம், தொடக்கநிலை, உயர்நிலைப் பள்ளிகளுக்குச் சென்று அங்குள்ள தமிழ் மாணவர்களின் குரல் பதிவுகள் சேகரிக்கப்பட்டன.
ஒரு விதத்தில் செயற்கை நுண்ணறிவு மனிதரைப் போன்றது. ஏனெனில், அதற்கும் கற்றல் மிக அவசியம். மென்மேலும் அது கற்கும்போதுதான், அதன் ஆற்றலும் அதிகரிக்கும். வருங்காலத்தில், பேச்சுத் தமிழ், எழுத்துத் தமிழ், பிற வட்டாரப் பேச்சு, தொனி ஆகியவற்றை வேறுபடுத்திக் கண்டுபிடிக்கும் ஆற்றலை இந்தத் தொழில்நுட்பம் கற்கலாம் என்று கூறப்படுகிறது.

