கவிதைக்கும் நாடகத்துக்கும் உள்ள தொடர்பை ஆராய்ந்தது, கடந்த ஆண்டின் எழுத்தாளர் விழாவில் இடம்பெற்ற 'கவிதை எனில், நாடகம்?' உரையாடல். பிரபல கவிஞரும் நாட்டுப்புறவியல் அறிஞருமான திரு எம். டி. முத்துக்குமாரசாமி நிகழ்வில் சிறப்புப் பேச்சாளராக இடம்பெற்றார்.
கவிதைகளிலிருந்து எவ்வாறு நாடகங்கள் பிறக்கின்றன என்பது அதிகம் பேசப்படுவதில்லை என்று கூறிய திரு முத்துக்குமாரசாமி, கவிதைகளின் கருப்பொருள்களும், வடிவங்களும் நாடகங்கள் அமைவதற்கு உதவுவதாக விளக்கினார். கவிதைகளில் இடம்பெறும் வர்ணனைகளும் உவமைகளும் மனத்தில் காட்சிகளைத் தோன்ற வைக்கின்றன.
தமிழ் இலக்கியங்களில், உணர்வுகளைச் சித்திரிக்கும்போது இயற்கை சார்ந்த உவமைகள் பல பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றை படிக்கும் வாசகர்கள் காட்சிகளைக் கற்பனைசெய்து பார்க்கின்றனர். இவற்றை நாடக காட்சிகளாக மாற்றுவது சாத்தியமாகிறது என்று கூறினார் கவிஞர்.
கவிதைகளில் சில சமயம் முகமற்ற கதாபாத்திரங்கள் இடம்பெறுகின்றன. இவை மனிதர்களாக இருக்கலாம். பொருள்களாக இருக்கலாம். இவற்றுக்கு முகமும் உணர்வும் தருகின்றனர் வாசகர்கள்.
"கவிதைகளில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றையும் வாசகர்கள் வெவ்வேறு விதமாய்க் கற்பனைசெய்து பார்க்கின்றனர். அவற்றுக்கு உணர்வூட்டும்போது, நாடகங்கள் பிறக்கின்றன," என்று விளக்கினார் கவிஞர்.
நிகழ்வில் இடம்பெற்ற கலந்துரையாடலில், 'பதிவதி' எனும் உள்ளூர்க் கவிதை நாடகத்தைப்பற்றிப் பேசப்பட்டது. அம்பிகாபதி-அமராவதி எனும் பழைய காதல் கதையை இந்நாடகம் வேறு விதத்தில் காட்டி இருந்தது. உண்மையான கதையின் இறுதிக் காட்சியில் நூறு பாடல்கள் இடம்பெறும். இந்நாடகத்திலோ, இவை மொத்தம் பத்துக் கவிதைகளாகச் சுருக்கப்பட்டிருந்தன. இவ்வகையில் கவிதைகளையும் நாடகங்களையும் இணைத்து, நவீன முறையில் படைக்கும்போது, இளையர்களையும் இப்படைப்புகள் கவர்கின்றன.

