65 வயதிலும் துடிப்புடன் சேவையாற்றும் கணேசன்

65 வயதிலும் துடிப்புடன் சேவையாற்றும் கணேசன்

2 mins read
79076719-90b3-4cc0-b49d-52a5f9523dac
-

தேசிய காற்பந்து விளையாட்டாளராக, விமானியாக, இளையர்களுக்கு வழிகாட்டியாக, திரு வெள்ளசாமி கணேசன் பல்வேறு துறைகளில் தடம் பதித்துள்ளார்.

1970-களில் 'லயன்ஸ்' சிங்கப்பூர் தேசிய காற்பந்து அணியில் விளையாட்டாளராக இணைந்த இவர், ப்ரீ ஒலிம்பிக்‌ஸ் உட்பட பல்வேறு போட்டிகளில் பங்கேற்றார். 1977-இல் நடந்த மலேசியா கப் போட்டியில் பங்குபெற்ற சிங்கப்பூர் அணியில் இவர் விளையாடினார். 12 ஆண்டுகளில் முதல் முறையாகச் சிங்கப்பூர் அணி அவ்வாண்டில் மலேசியா கப் போட்டியில் வென்றது.

விளையாட்டுத் துறையில் ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்குப் பணியாற்றியபின், 1984-ஆம் ஆண்டில் அவர் குடும்ப நலன் கருதி அத்துறையிலிருந்து விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எட்டுப் பேர் கொண்ட தமது குடும்பத்துக்கு அவர் வருமானம் ஈட்ட வேண்டி இருந்தது.

திரு கணேசன் விமானத்துறையில் நுழைந்தார். பயிற்சி எடுத்ததன் பின்னர் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் விமானியாக இணைந்தார். 43 ஆண்டு சேவைக்குப் பின், தற்போது 65 வயதில் பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

பணியிலிருந்து மட்டுமே ஓய்வுபெற்றுள்ள திரு கணேசன், தமது வாழ்வில் மென்மேலும் துடிப்புடன் இயங்கி வருகின்றார். அறிவுரை கேட்க முன்வரும் இளைய விமானிகளுக்கு அவர் தொடர்ந்து வழிகாட்டி வருகின்றார். அவர்களுக்குத் தமது அனுபவங்களைப்பற்றி எடுத்துக் கூறுவார். தனிப்பட்ட முறையில், உடலையும் மனத்தையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைப் பின்பற்றி வருகிறார் திரு கணேசன்.

"நாம் சமூகத்தில் நல்ல பங்காற்றுகிறோம் என்ற உணர்வுதான் நம்மை மிக இளமையாக வைத்திருக்கும்," என்று கூறினார் திரு கணேசன்.