கவலைக்கும் மன அழுத்தத்துக்கும் ஆளாவோர், வீட்டை விட்டு வெளியில் காலடி எடுத்து வைக்கத் தயங்கலாம். அவர்கள் தனிமையை விரும்பி வீட்டிலேயே முடங்கிக் கிடக்கலாம். சமூகத்திலிருந்து விலகிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இவர்களிடத்தில் இருக்கலாம்.
சிலர், தொடர்ந்து மிகக் கடுமையான முறையில் பல ஆண்டுகளுக்குத் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்வர். இதை ஜப்பானியர்கள் 'ஹிகிகொமொரி' (Hikikomori) எனக் கூறுவர். இது ஒரு ஜப்பானியமொழி வார்த்தையாகும்.
இந்த 'ஹிகிகொமொரி' போக்கும், சிங்கப்பூர் இளையரிடையே அதிகரித்து வரும் அறிகுறிகளும் ஒத்துப்போவதைக் கவனித்தார், 'இம்பார்ட்' எனும் லாபநோக்கற்ற அமைப்பின் தலைமை நிர்வாகி திரு நரசிம்மன் திவாசிகமணி. சமீப காலத்தில் அதிகமான இளையர்கள் தங்களைச் சமூகத்திலிருந்து, குடும்பத்தாரிடமிருந்து தனிமைப்படுத்திக்கொள்ள விரும்புவதாக அவர் தெரிவித்தார்.
எனவே, சமூக தனிமைப்பாடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இம்பார்ட் 'ஹோம் அலோன்' என்ற பயிலரங்கை நடத்தியது. இப்பயிலரங்கில் நான்கு நிபுணர்கள் கலந்துகொண்டு தங்களின் கருத்துகளை முன்வைத்தனர்.
தாழ்வு மனப்பான்மை, உணர்ச்சிகளை அடக்கிக்கொள்ளுதல், எதிர்பார்ப்புகளால் முடங்குவது முதலியவற்றால் 'ஹிகிகொமொரி' ஏற்படக்கூடும் என்றார் பேச்சாளர்களில் ஒருவரான முனைவர் லியூ கொங் மெங்.
இவற்றைக் கையாள்வதற்கு உதவுகிறது, 'சாய்ம்' (CHIME) எனும் வழிமுறை. குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் உறவுகளை வளர்த்துக்கொள்வது, எதிர்காலம் குறித்து நம்பிக்கை கொள்வது, நமது அடையாளத்தைப்பற்றித் தெரிந்துகொள்வது, நம்மை நாமே ஊக்குவித்துக்கொள்வது என ஐந்து படிகள் கொண்டுள்ளது இந்த 'சாய்ம்' வழிமுறை. இதனைப் பயன்படுத்தி, நாம் நமக்கே உதவியாக இருப்பதுடன், நம்மைச் சுற்றி இருப்போருக்கும் உதவலாம்.

