நரையும் திரையும் அழகே

நரையும் திரையும் அழகே

2 mins read
d8491de7-8000-4ec4-a1f3-581f6cb1ca02
-

விமானத்துறையில் பணியாற்றி வரும் 50 வயது ஆரோக்கிய ராஜ் ஜேசன், அழகியல் துறையிலும் தற்போது கால் பதித்துள்ளார்.

அழகிய முதியவர்களுக்கு வாய்ப்பளிக்கும் 'பிளேட்டினம் ஏஞ்சல்ஸ் மேனஜ்மெண்ட்' நிறுவனத்தில் இணைந்துள்ள இவர், "வயது வெறும் எண்ணிக்கை மட்டுமே. எந்த வயதிலும் என்னைத் துடிப்புடன் வைத்துக்கொள்ள தொடர்ந்து உடற்பயிற்சி செய்வேன்," என்று கூறுகிறார்.

இவர், முதுமையில் வரக்கூடிய முகச் சுருக்கங்களும் நரை முடியும் அழகைக் கெடுப்பதாக ஒரு காலத்தில் நினைத்ததுண்டு. தமது அழகான, கருமையான முடி நரைப்பதை விரும்பாத இவருக்கு நரை முடிக்குச் சாயம் பூசுவது ஒரு பழக்கமாக மாறியது.

ஆனால், மனைவி தந்த ஊக்கத்தால் பத்தாண்டுகளுக்கு முன்னர் சாயம் பூசுவதைக் கைவிட்டார் ஜேசன். நரை முடியை ஏற்றுக்கொண்டது தமது தன்னம்பிக்கையை உயர்த்தியது என்கிறார் இவர்.

"வயதாகும்போது பல்வேறு கடமைகள் குவிகின்றன. குடும்பத்தைப் பார்த்துக்கொள்வதற்கும், பணியில் முன்னேறுவதற்கும் நாம் பெரும்பாலான நேரத்தை ஒதுக்குகிறோம். நம்மைப் பராமரிப்பதற்கு நாம் முன்னுரிமை தருவதில்லை. ஊடகங்களும் விளம்பரங்களும் மூத்த அழகர்களைத் திரையில் கொண்டுவந்தால் இந்த நிலை மாறக்கூடும்," என்றார் ஜேசன்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக முதன்முதலில் ஒரு விளம்பரத்தில் தோன்றினார் இவர். அச்சமயத்தில், அழகியல் துறையில் மூத்தோரைப் பிரதிநிதித்தது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

நெற்றியிலும் உதடுகளுக்கு அருகிலும் ஏற்பட்டுள்ள சுருக்கங்கள், நரை முடி ஆகியவை ஒருவரின் அழகுக்கு மெருகூட்டுபவை என்கிறார் ஜேசன். ''ஒருவர் தன்னைத் தொடர்ந்து ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதே முழுமையான, உண்மையான அழகு,'' என்றும் அவர் கூறினார்.