தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பக்கவாத விழிப்புணர்வுக்கான பெருநடை

2 mins read
16181e74-4c06-451e-9fa7-c4dbbfcb9b76
-

பக்கவாத விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் ஒவ்வோர் ஆண்டும் 'ஸ்டெப்பிங் அவுட் ஃபார் ஸ்ட்ரோக்' பெருநடை ஏற்பாடு செய்யப்படும். அதனை ஈராண்டுகளுக்குப் பின் நேரடியாக நடத்தியது சிங்கப்பூர் தேசிய பக்கவாதச் சங்கம். பக்கவாதத்திலிருந்து மீண்டோரும் அவர்களின் பராமரிப்பாளர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இப்பெருநடையைச் சமுதாய, குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் தொடங்கி வைத்தார். தமது உரையில் சிங்கப்பூரில் இறப்புகளுக்கான நான்காவது முதன்மைக் காரணமாகப் பக்கவாதம் இருப்பதை அவர் சுட்டினார்.

கடந்த பத்து ஆண்டுகளாக 40முதல் 50 வயதுடைய சிங்கப்பூரர்களிடையே பக்கவாத ஆபத்து அதிகரிப்பதையும் அமைச்சர் குறிப்பிட்டார். எனவே, எல்லா வயதினரும் பக்கவாதம் குறித்த விழிப்புணர்வைக் கொண்டிருப்பது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

சிங்கப்பூர்த் தேசிய பக்கவாதச் சங்கத்தின் தலைவரான முனைவர் ஷாமளா, 'ஃபிஸியோதெரப்பி' எனப்படும் உடலியக்க மருத்துவ சிகிச்சைத் துறையில் 20 ஆண்டு அனுபவம் உள்ளவர்.

இவருக்கு, பக்கவாத மருத்துவத் துறையில் ஆர்வம் இருந்தது. இவரது பாட்டிக்குக் கடுமையான பக்கவாதம் ஏற்பட்டிருந்த அனுபவம் தமது கண்ணோட்டத்தை மாற்றியதாக முனைவர் ஷாமளா கூறினார்.

"பலரும் பக்கவாத அறிகுறிகளைக் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். வீட்டிலேயே சரிசெய்துகொள்ளலாம், வீட்டில் உள்ள மருந்து மாத்திரைகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம், சிறிது காலம் கடந்தால் குணமாகிவிடும் என்று எண்ணுகின்றனர். கை, கால்களில் ஏற்படும் வலிகளைப் புறக்கணிக்கின்றனர். பக்கவாதம் ஏற்பட்ட பிறகு உடனடியாக மருத்துவரிடம் செல்லவேண்டும். ஒரு நிமிடம் தாமதித்தாலும் அது பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தலாம்," என்றார் முனைவர் ஷாமளா.