புற்றுநோய் விழிப்புணர்வைப் பரப்பும் ஆணழகர்

புற்றுநோய் விழிப்புணர்வைப் பரப்பும் ஆணழகர்

2 mins read
e6da04ba-80aa-475b-85b1-0ef756dbf30a
-

ஒருவரின் தோற்றத்தைப் பார்த்துவிட்டு அவரை எடை போடக்கூடாது என்பது முன்னாள் பள்ளி உடற்யிற்சி ஆசிரியரான திரு அருண் ரொசியாவுக்குப் பொருந்தும்.

இவ்வாண்டின் சிங்கப்பூர் 'மேன்ஹண்ட்' போட்டியில் பங்குபெறும் ஆக மூத்த போட்டியாளர், 57 வயது திரு அருண் ஆவார். இவரின் கட்டுக்கோப்பான உடல் இளம் ஆண்களையும் ஆச்சரியப்படுத்தும். ஆனால், இவர் எதிர்கொண்ட சவால்கள் பல.

சில ஆண்டுகளுக்கு முன் திரு அருண் புற்றுநோயை எதிர்கொண்டு மீண்டார். 2015-ஆம் ஆண்டில், இவருக்கு மூன்றாம் கட்ட பெருங்குடல் புற்றுநோய் இருப்பது மருத்துவ சோதனையில் தெரிய வந்தது.

இதை அடுத்து, 28 முறை சிகிச்சைகளுக்குத் திரு அருண் சென்றார். அக்காலத்தில் உடலிலும் மனத்திலும் அவருக்குப் பெரும் வேதனை ஏற்பட்டிருந்தது. வலி வரும்போதெல்லாம் அவற்றை மறக்க 'பு‌‌ஷ்-அப்' உடற்பயிற்சிகள் இவருக்கு உதவின.

2016ஆம் ஆண்டுமுதல் இவரது உடலில் புற்றுநோய் தென்படவில்லை. நம்பிக்கை இல்லை என்றால் புற்றுநோயிலிருந்து மீண்டு வருவது பெரும் சவாலாக இருந்திருக்கும் என்று திரு அருண் விளக்கினார். இருப்பினும், துவண்டு விடாமல் விரும்பிய முறையில் வாழ்க்கையைத் தொடர இவர் உறுதிகொண்டுள்ளார்.

பெருங்குடல் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் சிங்கப்பூர் 'மேன்ஹண்ட்' போட்டியில் தாம் சேர்ந்ததாகக் கூறினார் திரு அருண்.

"பெருங்குடல் புற்றுநோய் பெரும்பாலும் ஆண்களைத் தாக்குகின்றது. ஆனால், நோயின் தாக்கத்தைப்பற்றிப் பேச அதிகமானோர் முன்வருவதில்லை. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைக் கொண்டிருக்க முடியும் என்பதை உணர்த்த விரும்புகிறேன்," என்று தெரிவித்தார் திரு அருண்.