நாட்டின் பாதுகாப்பிலும் பொதுச் சேவையிலும் நாட்டம் கொண்டுள்ள ராணுவப் பயிற்சி அதிகாரி கோவிந்தன் சோலை வள்ளி, 19, இவ்வாண்டு சிங்கப்பூரின் உயரிய விருதுகளுள் ஒன்றான அதிபர் கல்விமான் விருதைப் பெற்றுள்ளார். சிங்கப்பூர் ஆயுதப் படையின் உபகாரச் சம்பளத்தையும் இவர் அண்மையில் பெற்றார்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியர் ஒருவர் இவ்விருதைப் பெற்றுள்ளது இதுவே முதல் முறை. நெதர்லாந்து நாட்டிலுள்ள 'லைடன்' பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பட்டக்கல்வியில் அனைத்துலக உறவுகள், அமைப்புகள் தொடர்பான படிப்பை மூன்றாண்டுகளுக்குப் பயில உள்ளார் இவர்.
இந்த உபகாரச் சம்பளம் தமக்கு மிகுந்த ஊக்கம் அளிப்பதாகக் கூறினார் சோலை வள்ளி. வருங்காலத்தில் சிறந்த போர் வீரராகவும் தலைவராகவும் உருவெடுப்பதற்கான நல்ல வாய்ப்பாக இதை தாம் கருதுவதாகவும் இவர் கூறினார்.
நாட்டைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்காற்றும் சிங்கப்பூர் ஆயுதப் படையில் சோலை வள்ளி இணைந்துள்ளார். நாட்டுக்குச் சேவையாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் இணைந்து, தற்சமயம் ராணுவப் பயிற்சி அதிகாரியாக இவர் பணியாற்றி வருகிறார். தமது மேற்படிப்பை முடித்த பிறகு, பல ஆண்டுகளுக்குச் சிங்கப்பூர் ஆயுதப் படையில் பணிபுரியவும் அவர் விருப்பம் தெரிவித்தார்.
ஆங்கிலோ சீனத் தொடக்கக் கல்லூரியின் முன்னாள் மாணவியான சோலை வள்ளி, "என்னுடைய அம்மா சிண்டாவில் தொண்டூழியம் செய்வதைக் கண்டு உயர்நிலைப்பள்ளி காலத்திலேயே நானும் இணைந்து தொண்டூழியம் புரிய ஆரம்பித்தேன். அதன்மூலம் மாணவர்களை நேரடியாகச் சந்தித்து அவர்களுக்குக் கற்பித்தது எனக்கு மிகுந்த மனநிறைவை அளித்தது," என்று பகிர்ந்தார்.

