தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'ஒரு விளையாட்டை ரசிக்கக் கற்றுத் தாருங்கள்'

2 mins read
57914063-d397-40c0-8d63-af37dff2588d
-

கடைசிவரை சிங்கப்பூரின் காற்பந்தாட்டத் துறையில் தொடர்ந்து பங்காற்ற விரும்புவதாகக் கூறுகிறார் ஹாரிஸ் ஹருண். சிங்கப்பூர் வரலாற்றில் ஆக இளைய தேசிய காற்பந்து விளையாட்டாளராக 16 வயதில் அவர் சிங்கப்பூர் தேசிய காற்பந்து அணியில் காலடி எடுத்து வைத்தார். நூற்றுக்கும் மேற்பட்ட காற்பந்து போட்டிகளில் அவர் பங்குபெற்றுள்ளார்.

சிங்கப்பூரில் மட்டுமின்றி மலேசியாவிலும் தடம்பதித்துள்ளார் ஹாரிஸ். ஜோகூர் காற்பந்து அணிக்காகப் பல வெற்றிகளைக் குவித்த அவர், 2021ல் சிங்கப்பூர் திரும்பினார். தற்போது 'த லயன்ஸ்' எனும் சிங்கப்பூர் தேசிய அணிக்குத் தலைவராகவும் இருக்கிறார்.

"தொடர்ந்து கடுமையாக உழைத்தால், 2034ல் உலகக் கிண்ண காற்பந்துப் போட்டிக்கு நாம் தகுதிபெறுவோம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அவ்வாறு நாம் தகுதிபெறாவிட்டாலும், நம் அணி அடுத்தடுத்த மைல்கல்லை அடைவதற்காக உழைப்பதை நிறுத்தாது," என்றார் 31 வயது ஹாரிஸ்.

எதிர்காலத்தில் தம்முடைய பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் காற்பந்தை அறிமுகப்படுத்தும் ஆர்வம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

"பிள்ளைகளுக்கு விளையாட்டு முறைகளைப் பெற்றோர்கள் சொல்லித் தருவதைவிட, ஒரு விளையாட்டை ரசிக்க கற்றுத் தருவதே முக்கியம். இந்தத் தொழில்நுட்பக் காலத்தில் வெற்றிக்காக மட்டுமின்றி மனதுக்காக, வளர்ச்சிக்காக விளையாட வேண்டும். இதைக் கற்றுத் தருவது என்னைப் போன்ற பெற்றோர்களுக்கு ஒரு சவால்," என்று ஹாரிஸ் கூறினார்.

தமது பயணத்தில் பல்வேறு தடைகளைக் கடந்துள்ளார் ஹாரிஸ். விளையாடும்போது ஏற்பட்ட கடுமையான காயங்கள் அவரைப் பல முக்கியப் போட்டிகளில் பங்கேற்க முடியாமல் செய்துள்ளன. அப்போதும், காற்பந்திலிருந்து விலகிவிட ஒருபோதும் தாம் எண்ணியதில்லை என்று அவர் கூறினார்.