கவனத்தையும் செயல்திறனையும் பாதிக்கக் கூடிய தொழில்நுட்பம்

கவனத்தையும் செயல்திறனையும் பாதிக்கக் கூடிய தொழில்நுட்பம்

1 mins read
89c8dafc-bc86-430a-a469-1779014ed29f
87% நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு தங்கள் வணிகத்தில் மாற்றம் ஏற்படுத்தும் என நம்புகின்றன. - படம்: பிக்சாபே

கவனச்சிதறலுக்கு முக்கியக் காரணமாக இன்று தொழில்நுட்பச் சாதனங்கள் உள்ளன. நாம் காலையில் கண்விழித்தவுடன் முதலில் பார்ப்பது கைப்பேசித் திரையைத்தான். நாள் முழுவதும் அது நம் கையிலேயே இருக்கிறது.

"வாட்ஸ்அப், இன்ஸ்டகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகச் செயலிகளின்மூலம் மற்றவர்களுடன் எந்நேரத்திலும் நான் இணைந்திருக்கிறேன். அதே நேரத்தில் கவனம் அடிக்கடி கைப்பேசியின் பக்கம் திரும்புகிறது. அது செயல்திறனைக் குறைக்கிறது," என்றார் மாணவி தமிழ்மதி.

இளையர்கள் பலர் 'இயோல்பும்டா' (Yeolpumta), 'ஃபோரஸ்ட்' (Forest) போன்ற செயலிகளின் உதவியைத் தற்போது நாடுகின்றனர். இவை படிக்கும் அல்லது வேலை செய்யும் நேரத்தைக் கண்காணிக்கின்றன. இவற்றைப் பயன்படுத்தி நேரத்தை வகுத்துக்கொள்வதாகக் கூறுகின்றனர் இளையர்கள்.

"இச்செயலிகளில் என் நண்பர்கள் எவ்வளவு நேரம் படித்தனர் என்பதையும் என்னால் பார்க்க முடியும். இவை நமக்கும் நமது நண்பர்களுக்கும் இடையே ஆரோக்கியமான போட்டியை உருவாக்கும்," என்று மாணவி நிரஞ்சனா குறிப்பிட்டார்.

தொழில்நுட்பச் சாதனங்களால் ஏற்படும் கவனச்சிதறல்களைத் தவிர்க்க சில கட்டுப்பாடுகளை நிரஞ்சனா விதித்துக்கொள்கிறார். சமூக வலைத்தள அறிவிப்புகளை முடக்கி வைத்துவிடுவதாக அவர் கூறினார்.

இந்தியாவில் இருப்போருடன் இணைந்திருக்க மைக்கிரோசாஃப்ட் தளங்களைப் பயன்படுத்துகிறார் 48 வயது திருநாவுக்கரசு. குறிப்பாகக் கொவிட்-19 காலத்தில் தொழில்நுட்ப வசதிகளால் வீட்டிலிருந்தே வேலை செய்ய முடிந்தது என்றார் அவர்.

"ஆனால், எவ்வளவுதான் தொழில்நுட்பம் உதவியாக இருந்தாலும் அதில் பல பிரச்சினைகள் உள்ளன. உதாரணத்துக்கு, இணைய மோசடிகளில் சிக்கிக்கொள்ளும் ஆபத்து இருக்கிறது. இதனால் மனநலன் பாதிக்கப்படக் கூடும்," என்று அவர் எச்சரித்தார்