மன அழுத்தம், கவலை, தனிமை போன்ற உணர்வுகள் இணைய நடவடிக்கைகளை மாற்றியமைக்கின்றன. சமீப காலத்தில், பலரும் இணையம்வழிப் பொருள் வாங்குவதன்மூலம் ஆறுதலடைய பார்க்கின்றனர்.
மதுபானம், உணவகங்கள், வெளிநாட்டுப் பயணங்கள் என அதிகம் செலவழிக்க முடியாத கொவிட்-19 சூழலில், இணையத்தளங்களை நாடி மக்கள் தேவையற்ற பொருள்களை வாங்குவதும் உண்டு.
"இணையம்வழிப் பொருள் வாங்கும்போதெல்லாம் வாடிக்கையாளருக்கு ஒரு புத்துணர்ச்சி ஏற்படுகிறது. இதனாலேயே இணையம்வழிப் பொருள் வாங்கும் பழக்கத்திற்குப் பலரும் அடிமையாகின்றனர்," என்று அமெரிக்காவின் 'லைஃப்பிரிஜ் ஹெல்த்' தலைமை உளவியல் நிபுணர் குலோயி கிரீன்பொம் குறிப்பிட்டுள்ளார்.
இணையத்தில் பொருள் வாங்கும் பழக்கத்தை ஒருவரால் நிறுத்தமுடியாத நிலையில், அதற்கு அவர் அடிமையாகலாம்.
இதற்கு முதலில் இரண்டு கேள்விகளை நாம் கேட்டுக்கொள்ள வேண்டும்.
ஒன்று, பொருள் வாங்குவதை நிறுத்த முயன்றும் என்னால் நிறுத்த முடியாமல் போகிறதா என்பதைக் கேட்டுக்கொள்ள வேண்டும்.
பொருள் வாங்கும் பழக்கத்தால் நமக்கு குற்றவுணர்வு ஏற்படுகிறதா என்பதே நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய மற்றொரு கேள்வி.
இவ்விரண்டு கேள்விகளுக்கும் 'ஆமாம்' என்று நீங்கள் பதிலளித்திருந்தால், சிக்கல் இருக்கலாம் என்று கிரீன்பொம் கூறியுள்ளார்.
உங்களுக்கு உற்சாகம் தரும் வேறொரு பயனுள்ள நடவடிக்கையைக் கண்டுபிடியுங்கள். இணையத்தில் பொருள் வாங்குவதற்குப் பதிலாக அந்த நடவடிக்கையில் ஈடுபடுங்கள்.
பொருள் வாங்கும் முன் ஒரு பட்டியலைத் தயார்ப்படுத்திக் கொள்ளுங்கள். "இது எனக்குத் தேவையா? இதை போலவே வேறு பொருள் என்னிடம் உள்ளதா? இந்தப் பொருளை ஏன் வாங்க வேண்டும்?" என்ற கேள்விகளைக் கேட்டுக்கொள்ளுங்கள்.

