வீட்டிலிருந்தே கற்கும் முறை பள்ளிகளில் நிரந்தரமான அம்சமாகிவிட்டது. தாள் கோப்புகள் கூகுள் டிரைவாகவும், வகுப்பறைகள் கூகுள் வகுப்பறைகளாகவும் மாறிவிட்டன. இந்நிலையில், மின்னிலக்க தளங்களை ஆசிரியர்கள் அதிகமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
"மின்னிலக்க முறை கற்றலில் ஒவ்வொரு மாணவருக்கும் தனிப்பட்ட முறையில் கைகொடுக்க முடிகின்றது," என்றார் பயிற்சி ஆசிரியர் திருமதி மணிகண்டன் சுகுணா. 'நியர்பாட்' என்ற தளம் மிகப் பயனுள்ளதாய் இருக்கிறது என அவர் குறிப்பிட்டார். இத்தளம் ஆசிரியர்கள், மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்த உதவுகின்றது.
இதன்மூலம், ஆசிரியர்கள் தங்களின் குரல் பதிவுகளைப் பதிவேற்றம் செய்து மாணவர்களுக்கு வழிகாட்டலாம். அவற்றை உன்னிப்பாகக் கவனித்து, மாணவர்களும் அதே போல வாசித்துப் பதிவேற்றம் செய்யலாம்.
"'ஆப்பிள் கிளாஸ்ரூம்' செயலியைக் கொண்டு மாணவர்களின் இணையப் பயன்பாட்டை என்னால் கண்காணிக்க முடிகிறது. ஆனால், திருத்தங்களை எழுத மின்-பேனாவைப் பயன்படுத்துவதுதான் கடினமாக உள்ளது," என்று உயர்நிலைப் பள்ளி தமிழாசிரியரான திருமதி ராமைய்யா பாண்டிமீனாள் சொல்கிறார். 'கிளாஸ்கிக்' தளத்தைப்பற்றிப் பகிர்ந்துகொண்ட அவர், அது மாணவர்களின் பாடவேலைகளைக் கண்காணிக்கவும், உடனுக்குடன் கருத்துத் தெரிவிக்கவும் உதவுவதாகக் குறிப்பிட்டார்.
'பேட்லட்' தளம் வாய்மொழித் தேர்வு பயிற்சிக்குத் துணை நிற்பதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். மாணவர்கள் தங்களின் கருத்துகளைப் 'பேட்லட்' தளத்தில் எல்லோரும் காணும் வகையில் பதிவுசெய்யலாம்.
"சுயமாகக் கற்றுக்கொள்ளும் போக்கு, மின்னிலக்கக் கற்றலில் பன்மடங்கு அதிகரித்துள்ளது. தேர்வு, மதிப்பெண் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்ட கல்வி அனுபவத்தை மின்னிலக்க முறைகளின் மூலம் அளிக்க முடிகிறது," என்றார் மற்றொரு தமிழாசிரியரான திரு பாலசுப்ரமணியம்.