2020-ஆம் ஆண்டு ஜூலையில் சமூக ஊடகத்தில் செய்திகளைப் படித்துக்கொண்டிருந்தார் 28 வயது திரு சக்திபாலன் பாலதண்டாயுதம். அப்போது, எங்களுடைய ஒரு வயது குழந்தைக்குக் கல்லீரலைத் தானம் செய்ய முன்வாருங்கள் என்று அதன் பெற்றோர் விடுத்திருந்த வேண்டுகோள் திரு சக்திபாலனின் கண்ணிற்பட்டது.
அன்றைய தினம் பின்னிரவு 1 மணியளவில் அக்குழந்தையின் பெற்றோரைத் தொடர்புகொள்ளும்போதே, தம்முடைய கல்லீரலின் ஒரு பகுதியை அக்குழந்தைக்குத் தானம் வழங்கத் திரு சக்திபாலன் முடிவெடுத்திருந்தார்.
பல்வேறு பரிசோதனைகளுக்குப் பிறகு, தம்முடைய கல்லீரலின் 23 விழுக்காட்டைக் குழந்தை ரேயாவுக்கு அதே ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி தானம் வழங்கினார் இவர்.
தம்முடைய தன்னலமற்ற செயலுக்காகவும் மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கவும் 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் 2021-ஆம் ஆண்டுக்கான சிங்கப்பூரர்' எனும் விருதை 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி 9-ஆம் நாள் (புதன்கிழமை) திரு சக்திபாலன் பெற்றார். அதிபர் ஹலிமா யாக்கோப்பிடமிருந்து இந்த விருதை இவர் பெற்றுக்கொண்டார்.
2019-இல் பிறந்த ஒரு சில வாரங்களில் ரேயாவுக்கு biliary atresia என்னும் கல்லீரலைப் பாதிக்கும் அரியவகை நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த நோய் இருப்போருக்குக் கல்லீரலில் சுரக்கும் பித்தநீரைப் பித்தப்பைக்குக் கொண்டுசெல்லும் நாளம் அழன்று இருக்கும். பித்தநீர் பித்தப்பைக்குச் செல்வது தடைபடுகிறது. இதனால், கல்லீரல் செயலிழந்துவிடக்கூடிய ஆபத்து உள்ளது.
கல்லீரல் தானம் செய்த பிறகு, குழந்தை ரேயாவுடனும் அதன் பெற்றோருடனும் திரு சக்திபாலன் வலுவான பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டுள்ளார். குடும்ப உறுப்பினராகவே திரு சக்திபாலன் ஆகிவிட்டதாகப் பகிர்ந்துகொண்டார் குழந்தை ரேயாவின் தாயார் திருமதி ருத்ரா சரவணன்.
முதன்முதலில் குழந்தை ரேயாவிற்கு இந்தச் சிக்கல் இருப்பது தெரிய வந்த சமயத்தில், திருமதி ருத்ராவும் அவரின் குடும்பத்தாரும் தங்களின் கல்லீரலை வழங்கவே எண்ணினர். ஆனால், அவர்களில் யாருமே மருத்துவ ரீதியில் பொருத்தமாக இல்லை.
ஏ+ அல்லது ஓ+ ரத்தத்தோடு, சராசரி ஆரோக்கியத்துடன் ஒரு கொடையாளர் தேவைப்பட்டார். தமது சமூக ஊடகப் பக்கங்களில் இது குறித்துத் திருமதி ருத்ரா பதிவிட்டிருந்தார். தற்செயலாக அதனைக் கண்ட சக்திபாலன் உடனே கல்லீரல் தானம் குறித்து மேலும் அறிந்துகொள்ளத் தொடங்கினார்.
உறுப்புத் தானத்தை ஆதரித்துவரும் திரு சக்திபாலன், உதவி தேவைப்படுவோருக்கு உதவக் கூடுதலானோர் முன்வருமாறு கேட்டுக்கொள்கிறார்.
தாம் உதவ முன்வந்தது குறித்துப் பேசிய திரு சக்திபாலன், "கல்லீரல் தானம் செய்யும் ஒருவரைத் தேடிக்கொண்டிருந்தனர் குழந்தையின் பெற்றோர். எனவே, அவர்களுக்கு உதவுவதற்கு இதை ஒரு வாய்ப்பாக நான் கருதினேன்," என்றார்.

