மறைந்த எழுத்தாளர்களை நினைவுகூர்ந்த 'நினைவின் தடங்கள்'

2 mins read
6816c71a-37a8-493d-86f7-bbe13c4b07c3
-

இவ்வாண்டு (2023) அல்லது சென்ற ஆண்டு (2022) இறுதியில் மறைந்த ஒன்பது தமிழ் எழுத்தாளர்களை நினைவுகூர்ந்த 'நினைவின் தடங்கள்' நிகழ்ச்சி, தேசிய நூலக வாரியக் கட்டடத்தில் நடைபெற்றது.

2017 முதல் நடைபெற்றுவரும் இந்நிகழ்ச்சி, கொவிட்-19 பெருந்தொற்றின்போது தற்காலிகமாக இணையவழி நடைபெற்றது. இவ்வாண்டு அது நேரடியாக நடைபெற்றது. பெரும்பாலும் மலேசிய, தமிழ்நாட்டு எழுத்தாளர்களே நினைவுகூரப்படும் இந்நிகழ்ச்சியில் இவ்வாண்டு இடம்பெற்ற ஒன்பது எழுத்தாளர்களுள் ஒருவரைத் தவிர அனைவரும் சிங்கப்பூரைச் சார்ந்தவர்கள்.

ஆ.பழனியப்பன், ந.பாலபாஸ்கரன், சை.பீர்.முஹம்மது, ரெ.சோமசுந்தரம், கலைச்செம்மல் ராம்.நாராயணசாமி, பாத்தூறல் முத்துமாணிக்கம், எம்.கே.நாராயணன், பாத்தென்றல் முருகடியான், பாவலர் முல்லைவாணன் ஆகியோரே அந்த ஒன்பது எழுத்தாளர்கள்.

கலைச்செம்மல் ராம்.நாராயணசாமி இறக்கும் தருணம்வரை தம் சிறுகதைத் தொகுப்பைத் தேசிய நூலக வாரியத்தில் வெளியிடும் ஆசையை மனத்தில் வைத்திருந்தார். அவரது ஆசை இந்நிகழ்ச்சியில் நிறைவேறியது. நூல் வெளியானதோடு, வந்திருந்தோருக்கு இலவசப் பிரதிகளும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு மறைந்த எழுத்தாளர்களின் குடும்பத்தினரும் கலைக் குடும்பத்தினரும் வந்திருந்தனர். ஒவ்வோர் எழுத்தாளரைப்பற்றியும் வழங்கப்பட்ட ஏழு நிமிடப் படைப்புகள், எழுத்தாளரின் சிறப்புகளை நினைவுகூர வைத்தன. தம் தந்தை கலைச்செம்மல் ராம்.நாராயணசாமியைப்பற்றிப் பகிர்ந்துகொண்டார் அவருடைய மகள் தமிழ்மலர்.

"என் தந்தையின் வரலாற்றைப்பற்றியும் தமிழ்மொழிக்குப் பங்காற்றியுள்ளோரைப்பற்றியும் அறியும்போது, தமிழ்ப் பண்பாட்டில் என் தந்தை கொண்டிருந்த பற்றையும் ஆழ்ந்த அறிவையும் கண்டு நான் வியந்தேன். 17 வயதில் சிங்கப்பூர் வந்தவர் அத்தனை சவால்களையும் கடந்து தம் எழுத்தார்வத்தைப் பின்தொடர்ந்தது எனக்கும் என் கனவுகளை அடைய வழிகாட்டியாக அமைந்தது," எனத் தம் தந்தைக்கும் தனக்கும் இடையிலுள்ள சிறப்புத் தருணங்களைத் தமிழ்மலர் நினைவுகூர்ந்தார்.

நிகழ்ச்சி நெறியாளரான ஜெயசுதா சமுத்திரன், "இது மறைந்த எழுத்தாளர்களுக்குரிய நினைவஞ்சலியாக இருந்தாலும் அவர்களது சாதனைகளைக் கொண்டாடும் நிகழ்ச்சியாகவும் இருந்தது," என்றார். அவர்கள் வாழ்ந்தபோதே அவர்களது படைப்புகளை மேலும் பரவலாக மக்களுக்குத் தெரியப்படுத்தியிருக்கலாம் என்ற ஆதங்கத்தைத் தெரிவித்தார் ஜெயசுதா.

தம்மிடத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவராகத் திரு ரெ.சோமசுந்தரத்தை அவர் சுட்டினார். "நான் பகுதிநேர வானொலிப் படைப்பாளராக இருந்தபோது எனக்கு அவர் உச்சரிப்புப் பயிற்சி வழங்கினார். அவரிடம் கற்ற உத்திகள் இன்றுவரை எனக்குப் பயனளிக்கின்றன," என்றார் ஜெயசுதா.

"மறைந்த எழுத்தாளர்களின் நூல்களைப்பற்றிச் செவியால் கேட்பதுடன் நிறுத்திவிடாமல், மக்கள் படித்தும் பயன்பெற வேண்டும். அவர்களது நூல்களைத் தேசிய நூலக வாரியம் சேகரித்துள்ளது. அவற்றை மக்கள் இரவல் பெறலாம்," என்றார் தேசிய நூலக வாரியத் தமிழ்மொழிச் சேவைகள் பிரிவின் நூலகர் ரேணு சிவா.