சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழில் சபை அதன் முதல் பெண் நிர்வாக இயக்குநராகத் திருவாட்டி ஜமுனா ராணி கோவிந்தராஜூவை நியமித்துள்ளது. இவர் 26 ஆண்டுகளுக்கு மேலாகக் கல்வித் துறையிலும் சமூக சேவைத் துறையிலும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். முதன்முறையாகச் சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழில் சபையில் தொழில் சார்ந்த பணிகளில் இவர் ஈடுபட்டு வருகிறார்.
நிர்வாக இயக்குநர் என்ற பொறுப்பின்கீழ்ச் சபையின் செயல்பாடுகளில் ஈடுபடுதல், உறுப்பினர்களின் விருப்பங்களை ஆதரித்தல், அவர்களின் நலனைப் பாதுகாத்தல், இந்திய தொழில்முனைவர்களின் திறன்களை மேம்படுத்துதல் முதலிய அங்கங்களில் கவனம் செலுத்தி வருகிறார் இவர்.
ஆண்-பெண் வேறுபாடு பாராமல் சமமாகக் கருதியும் தலைமைத்துவப் பதவிகளில் பெண்களின் முன்னேற்றத்துக்கு வழிவகுத்தும் உள்ளது சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழில் சபை. இவ்வகையில் அதன் முயற்சி குறிப்பிடத்தக்கதே.
இதுவரை பெண் நிர்வாக இயக்குநர் நியமிக்கப்படாத நிலையில் சபையின் அமைப்புமுறைக்கு ஜமுனா புதிதாக அறிமுகமானதால் இவர் சில சவால்களுக்கு ஆளானார். ஆனால், சபையில் இருக்கும் உறுப்பினர்களின் உதவி ஜமுனாவுக்குப் பேராதரவாக இருக்கிறது.
"பெண்கள் ஆண்களுக்கு நிகராகக் கடுமையாக உழைக்க வேண்டும். பெண்களுடன் பணிபுரியும் ஆண்களும் அவர்களுக்கு ஆதரவுக்குரல் தர வேண்டும். இவை இரண்டும் இருந்தால் எந்தப் பெண்ணாலும் ஆண் ஆதிக்கம் நிறைந்த துறையில் சாதிக்க முடியும்," என்றார் ஜமுனா.
ஆசிரியர் பணியில் தொடங்கி, பிறகு சமூக சேவைத் துறைக்கு மாறிய ஜமுனா வெளிநாடுகளில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர். ஈராண்டுகள் இவர் இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் ஆசிரியராகப் பணியாற்றினார். மக்கள், கலாசாரம் என அனைத்தும் புதிதாக இருந்த சூழலுக்கு அறிமுகமான ஜமுனா, அதன் மூலம் கிடைத்த அனுபவப் பாடங்கள் தமது புதிய பொறுப்புக்குக் கைகொடுக்கும் என்று நம்புகிறார்.
சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழில் சபை 99 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது. சிங்கப்பூரில் இயங்கி வரும் பெரும்பாலான இந்திய தொழில்களின் வளர்ச்சிக்குத் தூணாக இச்சபை இருந்து வருகிறது. அதைத் தொடர்ந்து ஜமுனா இத்தொழில்கள் அனைத்துலக அளவிலும் விரிவாக்கம் பெறுவதற்கு உதவிக்கரம் நீட்ட முனைந்து வருகிறார்.
தொழில்முனைவர்களுக்கு மேலும் அதிகமான தொழில் வாய்ப்புகளை அளிக்க வேண்டுமென்று கூறிய ஜமுனா, சபையில் இளம் தொழில்முனைவர்கள் சேர்ந்து தங்களுக்கு அளிக்கப்படும் உதவிகளைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு ஊக்குவிக்கிறார்.
சபையில் உறுப்பினர்களுக்கு அதிக நடவடிக்கைகள் ஏற்பாடு செய்தல், வர்த்தகம் சார்ந்த வெளிநாட்டுப் பயணங்களில் சேர்தல் முதலியவற்றுடன் ஜமுனா அடுத்தாண்டு நடக்கவிருக்கும் சபையின் நூறாவது ஆண்டு விழாக் கொண்டாட்ட ஏற்பாடுகளில் முழுவீச்சாக ஈடுபட்டு வருகிறார்.
தலைமைத்துவப் பணிகளில் பெண்கள் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. தொழில்களும் அமைப்புகளும் ஆண்-பெண் எனப் பிரித்துப் பார்க்காமல் அனைவருக்கும் சம அளவில் வளர்ச்சி வாய்ப்புகளை வழங்க வேண்டும். இரு பாலினத்தோரையும் சமமாகவும் கருத வேண்டும். பெண்களைச் சுமையாகக் கருதும் போக்கும் மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருக்கும் வேளையில், பெண் தலைவர்கள் தொடர்ந்து மாற்றங்களை ஏற்படுத்துவது முக்கியம்.

