வெளிநாட்டு ஊழியர்களுடன் எளிதாகத் தொடர்புகொள்ள மொழிபெயர்ப்பு இணையத்தளத்தை உருவாக்கிய மருத்துவர்

வெளிநாட்டு ஊழியர்களுடன் எளிதாகத் தொடர்புகொள்ள மொழிபெயர்ப்பு இணையத்தளத்தை உருவாக்கிய மருத்துவர்

2 mins read
5c8e4a59-28b7-4675-9744-331a39a88df2
-

சுதாதாரப் பராமரிப்புத் துறையில் பணியாற்றும் முன்னிலை ஊழியர்கள், வெளிநாட்டு ஊழியர்களுடன் மேலும் சீராகத் தொடர்புகொள்வதற்குப் பயன்படும் ஒரு மொழிபெயர்ப்பு இணையத்தளத்தை உருவாக்கியுள்ளார் மருத்துவர் சுதேஸ்னா ராய் சௌதரி, 24.

இவர் வங்காள மொழி பேசும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவ ஒரு மொழிபெயர்ப்பு இணையத்தளத்தை எட்டு மணி நேரத்திற்குள் உருவாக்கினார்.

"2020-ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ஆம் தேதி கொரானா கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்ட வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையைப் பார்த்துத் திகைத்துப் போனேன். ஊழியர்களுக்கு உதவ வேண்டும் என்னும் நோக்கத்தில் இரவு முழுவதும் விழித்திருந்து இந்த இணையத்தளத்தை உருவாக்கினேன். சித்திரைப் புத்தாண்டு நாளான 14-ஆம் தேதி இந்த இணையத்தளம் செயல்படத் தொடங்கியது," என்றார் சுதேஸ்னா.

சுகாதாரத் துறையில் பயன்படுத்தப்படும் ஆங்கில வாக்கியங்களும் கேள்விகளும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அந்த வாக்கியங்களுக்கு நூறுக்கும் மேற்பட்ட ஒலிப்பதிவுகளும் இதில் இடம்பெறுகின்றன. ரத்த அழுத்தப் பரிசோதனைகளுக்குரிய வழிமுறைகள், கொவிட்-19 நோய்ப் பரவலை எதிர்கொள்ளத் தேவையான முக்கியக் குறிப்புகள் ஆகியவையும் இணையத்தளத்தில் இடம்பெற்றுள்ளன. அத்துடன், மொழிபெயர்ப்பு உதவி தேவைப்படுவோருக்கு வேண்டிய தொடர்பு எண்களும் அதில் உள்ளன.

இந்தி, மலையாளம், தெலுங்கு, பர்மிய, வியட்நாமிய, சிங்களம், மலாய், சீனம் ஆகிய மற்ற மொழிகளிலும் மொழிபெயர்ப்பு இணையத்தளங்கள் உருவாக்கச் சுதேஸ்னா திட்டமிட்டிருக்கிறார்.

"இந்திய சிங்கப்பூரர்கள் இந்தப் பிரச்சினையைச் சமாளிக்கப் பெரும் பங்காற்றலாம். இந்தியராக இருக்கும் நாம் அவர்களது இந்திய பண்பாட்டுப் பின்னணிகளைப் புரிந்துகொள்ள முடியும் என்பதால், வெளிநாட்டு ஊழியர்களுக்குப் பல வழிகளில் உதவிக்கரம் நீட்டலாம்," என்றார் தமிழ் மொழிபெயர்ப்புக்கு உதவியவர்களுள் ஒருவரான ஆர்த்தி.

இணையத்தளத்தை உருவாக்குவதில் சுதேஸ்னாவிற்கு அனுபவம் இல்லை. எனினும், நண்பர்களின் ஆலோசனைகளையும் இணைய வழிகாட்டுதலையும் கொண்டு இணையத்தளத்தை இவர் உருவாக்கினார். 24 மணி நேர நேரடி மொழிபெயர்ப்புச் சேவையை வங்காள மொழி தெரிந்த கிட்டத்தட்ட 30 தொண்டூழிய மொழிபெயர்ப்பாளர்கள் தற்போது வழிநடத்துகின்றனர். தமிழ்மொழி தெரிந்த 17 பேரும் மொழிபெயர்ப்புக்கு உதவுகின்றனர்.

"மருத்துவமனைகளுக்குரிய வங்காள மொழிபெயர்ப்புக்கு நானும் என் குடும்பத்தினரும் உதவி வருகிறோம். என் சகோதரி அவசரகால சிகிச்சைப் பிரிவில் மருத்துவராகப் பணியாற்றுகிறார். அவரிடம் கோரப்படும் மொழிபெயர்ப்புக் கோரிக்கைகளுக்கும் நான் உதவி வருகிறேன்," என்றார் மருத்துவர் சுதேஸ்னா.

தற்போது வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளிலும் சில மருத்துவமனைகளிலும் இந்த இணையத்தளம் பயன்படுத்தப்படுகிறது. கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் முதற்தொகுதி நோயாளிகளைப் பராமரிக்க அண்மையில் சிங்கப்பூர் எக்ஸ்போ வளாகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அங்குப் பல வெளிநாட்டு ஊழியர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் அங்கு மொழிபெயர்ப்புச் சேவை வழங்கி வருவதாகவும் டாக்டர் சுதேஸ்னா குறிப்பிட்டார்.

தமிழ்: http://tinyurl.com/covidtamiltranslation