ஒரே இடத்தில் 294 பானைகளில் பொங்கிய சாதனைப் பொங்கல்

ஒரே இடத்தில் 294 பானைகளில் பொங்கிய சாதனைப் பொங்கல்

2 mins read
22a9953c-c1b5-4a95-a682-a75164adc50f
-

கியட் ஹாங் இந்தியர் நற்பணிச் செயற்குழு 2023-ஆம் ஆண்டில் பொங்கல் கொண்டாட்டச் சாதனை படைத்தது. குடியிருப்பாளர்கள், சமூகத்தினர் என முந்நூறுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட அந்த விழாவில், 294 பேர் ஒன்றாகப் பொங்கல் பானை வைத்து 'பொங்கலோ பொங்கல்' எனச் சொல்லிப் புதிய சாதனை படைத்தனர். மொத்தம் 1,200 பேருக்கு வாழை இலையில் மதிய உணவும் பரிமாறப்பட்டது.

லிட்டில் இந்தியா வர்த்தகர்கள் மரபுடைமைச் சங்கத்தின் (லிஷா) அழைப்பை ஏற்று இந்தியாவிலிருந்து வந்திருந்த நாட்டுப்புறப் பாடகர்களும் நாதஸ்வர, தவில் இசைக் கலைஞர்களும் மக்களை மகிழ்வித்தனர். காவடியாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், மயிலாட்டம் ஆகியவற்றையும் மக்கள் கண்டு களித்தனர். குறிப்பாக, ஐந்தடுக்குத் தீக்கரகம் ஏந்தி ஆடிய இந்திய நடனமணியின் நடனத்தை மக்கள் பெரிதும் ரசித்துப் பாராட்டினர்.

கியட் ஹாங் வட்டார மக்கள், வெளிநாட்டு ஊழியர்கள், சிறார்முதல் பெரியோர் எனப் பலதரப்பட்ட மக்கள் விழாவில் கலந்துகொண்டனர். பாரம்பரிய விளையாட்டுகளில் பங்கேற்று மக்கள் பரிசுகளும் வென்றனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட சுவா சூ காங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஸுல்கர்னைன் அப்துல் ரஹிம் குத்துவிளக்கேற்றிக் கொண்டாட்டத்தைத் தொடங்கிவைத்தார்.

இதுபற்றிக் கருத்துத் தெரிவித்தது கியட் ஹாங் இந்தியர் நற்பணிச் செயற்குழு. கிராமங்களில் பொங்கல் விழா மிக விமரிசையாக, இயற்கைச் சூழலில் கொண்டாடப்படுகிறது. அத்தகைய விழா உணர்வைக் கியட் ஹாங் வட்டாரத்துக்குக் கொண்டு வர வேண்டும் என்பதே இவ்விழாவின் நோக்கமாக இருந்ததாகச் செயற்குழு கூறியது.

இந்தக் குழு, கடந்த 2019-ஆம் ஆண்டில் முதன்முதலாக இத்தகைய ஒரு சாதனையைப் படைத்தது. அவ்வாண்டில் 224 பேர் ஒரே இடத்தில் பொங்கல் பானை வைத்துப் பொங்கினர். அந்தச் சாதனையை விஞ்சும் வகையில் 2023-ஆம் ஆண்டில் மொத்தம் 294 பேர் ஒன்றாகப் பொங்கல் வைத்தது புதிய சாதனையானது.

"சில ஆண்டுக் காலமாய்க் கொவிட்-19 சூழலால் முழு வீச்சில் சமூகத்தினருடன் இணைந்து பொங்கலைக் கொண்டாட இயலவில்லை. இந்தக் குறையைத் தீர்த்து வைக்க நாங்கள் முயன்றோம். நோய்ப்பரவல் காலத்துக்குப் பின்னர், மக்கள் பெரிய அளவில் ஒன்றுகூடிய ஒரு நிகழ்ச்சியாக இந்த ஆண்டின் பொங்கல் விழா அமைந்தது," என்று செயற்குழுத் தலைவர் திரு அருமை சந்திரன் கூறினார்.