சாதனை படைத்த மறுபயனீட்டுப் பொங்கல் பானை

சாதனை படைத்த மறுபயனீட்டுப் பொங்கல் பானை

2 mins read
21ae2c45-3e2c-485e-9158-03aa91a1f69c
-

சுமார் 3000 பால் பொட்டலங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட 'பொங்கல் பானை' ஒன்று சிங்கப்பூர்ச் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. ஏறக்குறைய 300 செண்டிமீட்டர் அகலமும் 270 செண்டிமீட்டர் உயரமும் கொண்டது இப்பானை வடிவம்.

தோ பாயோ மேற்குச் சமூக மன்ற இந்தியர் நற்பணி செயற்குழு ஏற்பாடு செய்த 'நம்ம பொங்கல்' எனும் பொங்கல் கொண்டாட்டம் பிப்ரவரி 4-ஆம் தேதி தோ பாயோ மேற்குச் சமூக மன்றத்தில் நடைபெற்றது. 300 பேர் நிகழ்வில் கலந்துகொண்டனர். இதன் சிறப்பு அம்சமாக நீடித்த நிலைத்தன்மையை வலியுறுத்தும் வகையில் சாதனை புரிந்துள்ளனர் தோ பாயோ மேற்குக் குடியிருப்பாளர்கள்.

நிதி, போக்குவரத்து மூத்த துணை அமைச்சரும் பீஷான்-தோ பாயோ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு சீ ஹொங் டாட் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். "நமது கலாசாரத்தைக் கொண்டாடுவதுடன் மறுபயனீட்டின் முக்கியத்துவத்தைக் கொண்டு சேர்ப்பதற்கும் ஓர் அர்த்தமுள்ள நிகழ்ச்சியாக இது அமைந்துள்ளது," என்று திரு சீ கூறினார்.

வில்லுப்பாட்டு, நடனம், இசை எனக் களைகட்டியது மேடைக் கலைநிகழ்ச்சி. உறியடி, நொண்டியடித்தல், பரமபதம் முதலிய இந்திய பாரம்பரிய விளையாட்டுகளில் பலர் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். மேலும், கோலமிடுதல், பொங்கல் வைத்தல் முதலிய நடவடிக்கைகளுடன் பொங்கல் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. பானையில் ஓவியம் தீட்டும் போட்டியும் நடத்தப்பட்டது.

பால் பொட்டலங்களால் உருவாக்கப்பட்ட ஆகப் பெரிய வடிவம் என்ற அடிப்படையில் பொங்கல் பானை சிங்கப்பூர்ச் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தது. "வடிவத்தை அமைப்பதில் பல சவால்களைச் சந்தித்தபோதும் நாங்கள் ஒன்றுகூடி இச்சாதனையைப் புரிந்துள்ளோம்," என்று பானையை அமைக்க உதவியவர்களுள் ஒருவரான திருமதி விஜய பாரதி கூறினார்.

"சிறுவர்முதல் பெரியோர்வரை நமது பாரம்பரிய விளையாட்டுகள், கலைகள் ஆகியன குறித்து அறிந்துகொண்டார்கள். நமது அடையாளத்தைப்பற்றி நான் கூடுதலாக இன்று புரிந்துகொண்டேன்," என்று கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட தோ பாயோ மேற்கு வட்டாரக் குடியிருப்பாளரான அஸ்வதா பாரத்ரவி குறிப்பிட்டார்.

மறுசுழற்சியில் அதிக ஆர்வம் கொண்ட திருவாட்டி மல்லிகா பேகம், இச்சாதனை பொங்கல் நிகழ்ச்சியை முன்னிட்டுப் படைக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டினார். இதனால், அன்றாடக் குப்பைகளை மறுசுழற்சி செய்வதன் முக்கியத்துவத்தை மேலும் பலர் அறிந்துகொள்வர் என்று அவர் கூறினார். அதே சமயம், வீட்டிலேயே இல்லாமல் இந்த வட்டாரத்தில் உள்ளவர்களுடன் இணைந்து சமூக நிகழ்ச்சிகளில் பங்குபெறுவதால் புதிய நண்பர்கள் கிடைத்துள்ளதாகத் தெரிவித்தார் திருவாட்டி மல்லிகா.

"இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் நமது சமூகத்தில் மறுபயனீடு, மறுசுழற்சி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும். அதே நேரம், இந்தியர்கள் மட்டுமின்றிப் பிற இனத்தவரும் பொங்கல்பற்றியும் இந்திய பண்பாட்டைப்பற்றியும் தெரிந்துகொள்ள இக்கொண்டாட்டம் வழிவகுத்தது," என்று தோ பாயோ மேற்கு தாம்சன் சமூக மன்ற இந்தியர் நற்பணி செயற்குழுவின் தலைவர் வி.ஜி.பாலசந்தர் கூறினார்.