புதிய மணவாழ்க்கையில் அடியெடுத்து வைத்திருக்கிறார் 25 வயது அமுதினி சிவம். இவர் இன்று மனமகிழ்ச்சியுடன் கணவரோடு சேர்ந்து சிங்கப்பூரில் பொங்கல் பொங்குகிறார். கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இவருக்கு ஆஸ்திரேலியாவில் திருமணம் நடந்தது.
கிருமித்தொற்றுக் கட்டுப்பாடுகளால் இவரால் தாய்நாடான சிங்கப்பூருக்குத் திரும்ப வர இயலவில்லை. நான்காண்டுப் பிரிவுக்குப் பிறகு, பொங்கல் கொண்டாடுவதற்காக இப்போது சிங்கப்பூர் வந்து சேர்ந்திருக்கிறார் அமுதினி. 25 வயதாகும் அமுதினியின் கணவர் தாமஸ் பிரெண்டேன் கடல் தாண்டிப் பயணம் செய்வது இதுவே முதல் முறை. விமானத்தில் முதன்முறையாகத் தொலைதூரப் பயணம் மேற்கொண்டது மிக உற்சாகமாக இருந்ததாகத் தாமஸ் பகிர்ந்துகொண்டார்.
ஆஸ்திரேலிய தலைநகரான கேன்பராவைச் சேர்ந்த ஒருவரை அமுதினி மணம் முடித்துள்ளார். வெளிநாட்டில் இருந்தபோது தம் குடும்பத்தாரைக் காணவும் சிங்கப்பூர் உணவுவகைகளைச் சுவைக்கவும் அமுதினி பெரிதும் ஏங்கி இருந்தார். ஆகவே, சிங்கப்பூரில் குடும்பத்துடன் தமது தலைப்பொங்கலைக் கொண்டாட அவர் மிக ஆவலுடன் இருந்தார். தலைப்பொங்கலானது, புதிதாகத் திருமணமான தம்பதிகளின் முதல் பொங்கல் கொண்டாட்டத்தைக் குறிக்கிறது.
ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் பொங்கல் வைத்துப் பொங்கல் திருநாளைக் கொண்டாடுவதுண்டு. ஆனால், சிங்கப்பூர் வீடுகளிலும் லிட்டில் இந்தியாவிலும் இடம்பெறும் சிறப்புமிக்க தைத்திருநாள் கொண்டாட்டங்கள் தனி ஆனந்தம் தருபவை என்றார் அமுதினி.
மகப்பேற்றுத் தாதியாகப் பணிபுரியும் அமுதினி, 'ஓ' நிலைத் தேர்வுகள் முடிந்தவுடன் 2014-இல் கேன்பராவிற்குப் படிக்கச் சென்றார். தாமஸ் அங்குப் பகுதிநேர வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது அமுதினிக்கு அறிமுகமானார். அப்படித் துளிர்விட்ட நட்பு காதலாக மலர்ந்தது. மூன்றரை ஆண்டுக் காதலுக்குப் பின்னர் அவர்களின் திருமணம் நடந்தேறியது. கிறிஸ்துவ சமயத்தைச் சேர்ந்த தாமஸ், இந்திய கலாசாரத்தைப் பெரிதும் விரும்புகிறார் என்றார் அமுதினி.
கோவில்களுக்குச் செல்வது மன அமைதி தருவதாகவும் இந்திய கலாசாரம் வண்ணமயமானது என்றும் கூறினார் தாமஸ். தாமஸுக்குத் தமிழரின் பண்பு நெறிகளை எடுத்துரைக்கப் பொங்கல் போன்ற ஒரு திருநாள் ஏற்றது என உணர்கிறார் அமுதினி. தமிழ் உணவுவகைகளில் பாயசத்தையும் தோசையையும் விரும்பி உண்ணும் தாமஸ் ஆஸ்திரேலியாவில் மின்னியல் பொறியாளராகப் பணிபுரிகிறார்.
இம்மாத இறுதியில் ஆஸ்திரேலியாவுக்குப் புறப்படவிருக்கும் இந்தத் தம்பதியினர் ஆஸ்திரேலியாவில் அடுத்த பொங்கலை விமரிசையாகக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளனர். வருங்காலத்தில் தங்களுடைய குழந்தைகளிடமும் இந்திய பாரம்பரியத்தின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும் என்பது இத்தம்பதியின் விருப்பம் ஆகும். தங்களின் குடும்பத்தில் இந்திய கலாசாரமும் நிரம்பி இருக்க வேண்டுமென்று விரும்புகின்றனர்.
"மருமகன் தமிழ்ச் சொற்களைக் கற்றுக்கொள்வதையும் அவற்றை உச்சரிக்க முயல்வதையும் பார்க்கும்போது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. தமிழர்களுக்கு முக்கியமான பொங்கல் திருநாளை இங்கு எங்களோடு கொண்டாடுவது எங்களுக்கு மகிழ்ச்சி தருகிறது. பிற்காலத்தில் இருவரும் இந்த மரபை வெளிநாட்டில் தொடர நினைக்கிறார்கள். அது பாராட்டத்தக்கது," என்று கூறினார் அமுதினியின் தாயார் சரஸ்வதி இளங்கோவன்.
"என்னுடைய புதிய வீட்டில் தங்கை பொங்கல் கொண்டாடுவது மகிழ்ச்சியாக உள்ளது. தாமஸ் பொங்கலும் பாயசமும் சமைப்பதற்குக் காட்டும் ஆர்வம் பாராட்டப்பட வேண்டியது," என்கிறார் அமுதினியின் சகோதரி சிவகாமி சிவம்.

