தை பிறந்தால் எங்களுக்கும் வழி பிறக்கிறது

தை பிறந்தால் எங்களுக்கும் வழி பிறக்கிறது

3 mins read
7db6f6f2-ab19-44c2-be2e-d04cfba2f4ee
-

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது முழுக்க முழுக்க உண்மை என்கிறார்கள் 'நெட்டி மாலை' தயாரிப்பில் ஈடுபட்டு வரும் செல்வம்-வேதவள்ளி தம்பதியர். இவர்கள் தமிழ்நாட்டில் கடந்த 20 ஆண்டுகளாய் நெட்டி மாலை தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளனர். நெட்டி என்பது நீரில் விளையும் ஒருவகைச் செடி. நம் முன்னோர்கள் இச்செடியில் மாலை செய்து மாட்டுப்பொங்கலன்று கால்நடைகளுக்கு அணிவிப்பர்.

அறுவடை முடிந்தபின், தை மாதம் முதல் தேதியன்று வரும் பொங்கல் விழா மங்கலகரமானது. மாட்டுப் பொங்கல் மேலும் அலங்காரமயமானது. மாட்டுப் பொங்கலன்று பசு, காளை, கன்றுகள் ஆகியவற்றைச் சுத்தமாகக் குளிப்பாட்டிக் கொம்புகளுக்குச் சாயம் தீட்டுவர். அவற்றுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனப் பொட்டு வைத்து, பலவித மாலைகளை அணிவிப்பர். இவற்றுள் நெட்டி மாலை, மாவிலை வேப்பிலைத் தோரணமாலை, கரும்பு வாழைப்பழ மாலைகள் அடங்கும். பசுக்களை வீட்டின் உள்ளே அழைத்துச் சென்று அவற்றுக்கு நன்றி கூறுவது தமிழர்களின் சிறப்பு.

"மங்கலகரமான மாட்டுப் பொங்கலை மேலும் மங்கலகரமானதாக ஆக்கும் வகையில் நாங்கள் நெட்டி மாலை கட்டும் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். மாட்டுப் பொங்கலன்று காளைகளும் பசுக்களும் கன்றுகளும் எங்கள் வண்ண வண்ண மாலைகளுடன் கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதைக் காணும்போது பூரித்துப்போவோம்," என்று செல்வம் தம்பதியர் கூறினர். திரு. செல்வத்தின் உறவினர்களும் நெட்டி மாலை கட்டும் தொழிலைத் தலைமுறை தலைமுறையாகச் செய்துவருகிறார்கள்.

36 வயது திரு. செல்வத்தின் தந்தை நெட்டி மாலை தயாரிப்பதில் கெட்டிக்காரர். பல ஆண்டுகளாய்த் தொடர்ந்து இத்தொழிலில் ஈடுபட்டு வந்திருந்தார் அவர். அப்பா மறைந்த பிறகு, அத்தொழிலைத் தாமே மேற்கொண்டார் திரு. செல்வம்.

பொங்கலுக்கு முன்னர் நவம்பர், டிசம்பர் மாதங்களில் இத்தம்பதியின் வேலை தொடங்கிவிடும். நீண்டு இருக்கும் நெட்டிச் செடித் தண்டுகளை இருவரும் நேரில் சென்று வெட்டி வருவார்கள். ஏரிகளில் விளையும் நெட்டிச் செடிகளையும் தேவைப்படும் தாழை மடல்களையும் வெட்டிக்கொண்டு வந்துவிடுவர். இந்த மடலில் இருந்து கிடைக்கும் நாரை நூல் போலப் பயன்படுத்தி மாலை கட்டப்படுகின்றது. இந்த நார் நூலைவிட வலுவாக, உறுதியாக, எளிதில் அறுந்து போகாததாக இருக்கும். மாலை வளையாமல், துவண்டு விழாமல் இருக்க உதவும்.

தங்களின் வீட்டுப் பின்பகுதியில் செல்வமும் அவரின் மனைவியும் வேலையைத் தொடங்குவர். நெட்டியைப் பதப்படுத்தி, அதைக் கத்தியால் பல வடிவங்களாக முதலில் செதுக்கிக்கொள்வார்கள். பின்னர், இந்த வடிவங்களைப் பல வண்ணச்சாயங்களில் நனைத்துக் காயப்போடுவர். அவற்றை எல்லாம் நாரில் கோத்து மாலையாக இருவரும் தயாரிப்பர். 1,000முதல் 3,000 மாலைகள்வரை இத்தம்பதியினர் ஒவ்வோர் ஆண்டும் தயாரிக்கின்றனர்.

நெகிழி மாலைகள் இப்போது பிரபலமாகி உள்ளன. பல வண்ணங்களிலும் அவை வருகின்றன. இருந்தாலும், நெட்டி மாலைகளை விரும்புவோர் ஏராளம் இன்னும் உள்ளதாகத் திருமதி வேதவள்ளி கூறினார்.

மூன்று நாள்கள் கொண்டாடப்படும் தமிழர்களின் பொங்கல் விழா அவர்களின் வாழ்வில் மிக முக்கியமான ஒன்று. நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்ச பூதங்களுக்கும் நன்றி சொல்வதோடு, கால்நடைகளுக்கும் தமிழர்கள் நன்றி கூறி மனநிறைவடையும் விழா பொங்கல். தை பிறந்தால் வழி பிறக்கும் என்று தொன்றுதொட்டு நம்பப்படுகிறது. தங்களின் குடும்பத்துக்கும் பொங்கல் விழாவின்மூலம் வழி பிறக்கிறது எனத் திரு. செல்வம் நம்புகிறார்.