சேவை உணர்வுடன் பொங்கல் விழா

சேவை உணர்வுடன் பொங்கல் விழா

2 mins read
22c679fc-474f-4638-9fde-e46ac44b67da
-

முதியோர்களுடன் பொங்கல் விழாவை இனிதே கொண்டாடி மகிழ்ந்தனர் சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழக மாணவர்கள். ஸ்ரீ நாராயண மிஷன் பராமரிப்பு நிலையத்தைச் சேர்ந்த இம்முதியோர்களுடன் cமகிழ்ச்சி அடைந்ததாகக் கூறினர் மாணவ தொண்டூழியர்கள். 'ஈதல்' என்ற இந்த தொண்டூழிய நிகழ்ச்சியைத் தமிழ்ப் பேரவையும் சிங்கப்பூர்த் தமிழர் இயக்கமும் இணைந்து வழங்கின.

மாணவர்கள் இவ்வாண்டு, தமிழ்ச் சமூகத்தை மட்டும் ஒன்றிணைக்காமல், பிற இனத்தவரையும் ஒன்றிணைத்துப் பொங்கல் விழாவைக் கொண்டாடினர். முதியவர்களுக்காக நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் பொங்கல் பானைகளுக்கு வண்ணம் தீட்டுதல், கோலமிடுதல் முதலிய நடவடிக்கைகள் இடம்பெற்றன.

சிங்கப்பூரில் தற்போது முதியோரின் எண்ணிக்கை வெகுவாகக் கூடியுள்ளது. இவர்களுள் பலர் தனியே வசிப்பதும் வழக்கமாகிவிட்டது. தனிமையில் வாடும் முதியவர்களை மகிழ்விக்கவும் பிற இனத்தவருக்கு நம் பாரம்பரியத்தை எடுத்துரைக்கவும் இந்நிகழ்ச்சி நல்லதொரு தளமாக அமைந்தது.

முதியோர்களுக்காகச் சேலை அணிவகுப்பு ஒன்றையும் மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். தமிழ்ப் பேரவையின் துணைத் தலைவி, பாலமுருகன் தீபிகா, சேலை அணிந்து பவனிவந்த முதியோர்களைப் பார்த்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்ததெனக் கூறினார்.

இந்நிகழ்ச்சியின் இரண்டாம் அங்கமாக இம்முதியோர்களுக்கு 'டிக்டாக்', 'ஹெல்த்ஹப்' ஆகிய செயலிகளைப் பயன்படுத்தும் பயிலரங்கு ஒன்று நடத்தப்பட்டது. முக்கியமாக, 'ஹெல்த்ஹப்' செயலியானது முதியோரின் உடல்நலப் பராமரிப்பைக் கண்காணிக்கிறது. ஆரோக்கியம் குறித்த முக்கியச் சேவைகளையும் இந்தச் செயலி ஒன்றிணைக்கிறது.

மாணவர்கள் முதியோர்களுக்கு இச்செயலிகளை அறிமுகப்படுத்தி அடிப்படைப் பயன்பாடுகளைக் கற்றுத் தந்தனர். தொழில்நுட்பம் நிறைந்த இக்காலத்தில் முதியவர்கள் சுதந்திரமாகவும் சுயமாகவும் செயல்படுவது அவசியம். அதற்கு உதவ எண்ணி இந்த அங்கம் நிறைவேற்றப்பட்டது.

குடும்பத்துடன் பொங்கல் விழாவைக் கொண்டாடும் வாய்ப்புப் பெரும்பாலானோருக்கு உள்ளது. ஆனால், தனியே வாழும் முதியோருக்கு இத்தகைய வாய்ப்புக் கிடைப்பதில்லை. அவர்களுடன் சில மணி நேரம் செலவழித்து அவர்களை மகிழ்ச்சிப்படுத்தியதில் மாணவர்களும் மகிழ்ந்தனர்.

சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் மற்றொரு பிரிவினரான வெளிநாட்டு ஊழியர்களையும் ஏற்பாட்டுக் குழு மறந்துவிடவில்லை. 'இட்ஸ்ரெய்னிங்ரெயின்கோட்ஸ்' அமைப்புடன் இணைந்து வெளிநாட்டு ஊழியர்களுக்கு உணவுப்பொருள்கள், 'பபல் டீ' ஆகியவற்றை வழங்கி உதவியது தமிழ்ப் பேரவை.

வெளிநாட்டு ஊழியர்களைச் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பு மாணவர்களுக்குக் கிட்டியது. அவர்களுடன் பேசியதில் கொவிட்-19 கிருமிப்பரவல் எத்தகைய தாக்கத்தை அவர்களிடத்தில் ஏற்படுத்தி உள்ளது என்பதை மாணவர்கள் புரிந்துகொண்டனர். வெளிநாட்டு ஊழியர்கள் எதிர்கொண்ட சவால்களும் பாதிப்புகளும் பற்பல. அவற்றைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள முடிந்ததாக மாணவர்கள் கூறினர்.