கலையும் இலக்கியமும் வரலாறும் சங்கமிக்கும் இடமாக உருவெடுத்துள்ளது சிங்கப்பூர்த் தேசிய நூலகத்தின் 'தமிழ்ச் சோலை'. இது தமிழ் வாசகர்களுக்குப் பயன்தரும் களஞ்சியமாக அமைகிறது. ஏராளமான வளங்களைக் கொண்டுள்ள தமிழ்ச் சோலை உட்லண்ட்ஸ் வட்டார நூலகத்தில் 2022-ஆம் ஆண்டில் பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டது.
தமிழர்கள் அதிக அளவில் தமிழ்ச் சோலைக்கு வருகைபுரிவர் என்றும் அவர்கள் அங்கு உள்ள வளங்களைப் பெரிதும் பயன்படுத்துவர் என்றும் தேசிய நூலக வாரியம் நம்புகிறது. "தமிழ்ச் சோலை மக்களிடையே தமிழ்ப் புழக்கத்தை மேலும் ஊக்குவிக்கும் என்று நம்புகிறோம்," என்று தேசிய நூலக வாரியம் தெரிவித்தது.
தமிழ்ச் சோலை தமிழர்களுக்குரிய வளங்களையும் வசதிகளையும் கொண்டுள்ளதோடு, பிற மொழியினருக்கும் தமிழ் குறித்த கூடுதல் வளங்களைப் பெற்றுள்ளது. நமது கலாசாரம், பண்பாடு, மொழியியல் ஆகியவற்றை விளக்கும் ஆங்கிலம் அல்லது பிறமொழி நூல்களையும் இங்குக் காணலாம். தமிழ்மொழி வாசிப்புக் குறித்துப் பேசிய நூலகர் ரேணு சிவா, "கொவிட்-19 சூழலில் தமிழ் நூல் வாசிப்புக் குறைந்தது. ஆனால், மின்னூல்கள் தொடர்ந்து வாசிப்புக்குக் கைகொடுத்து வந்தன. நாங்கள் மேலும் மின்னூல் தொகுப்பை விரிவுபடுத்தியுள்ளோம்," என்றார்.
தமிழ்ச் சோலையில் இருக்கக்கூடிய மின்னிலக்கப் பலகைகளில் தமிழ் மின்னூல்களையும் மின்சஞ்சிகைகளையும்பற்றி அறிந்துகொள்ளலாம். அவற்றின் முன்னோட்டங்களைப் படித்து, நூலகக் கைப்பேசிச் செயலியின்மூலம் இரவல் பெறும் வசதியும் உருவகாக்கப்பட்டுள்ளது.
வாசிப்புக் குறித்த நிகழ்வுகளுக்கும் தமிழ்ச் சோலை ஆதரவளிக்கும். வாசிப்பு வட்டங்கள், மொழிபெயர்ப்புச் சார்ந்த நிகழ்வுகள், எழுத்தாளர் சந்திப்புகள் போன்ற நிகழ்ச்சிகள் இங்கு இடம்பெற்று வருகின்றன.
திருக்குறள் காட்சியகம் என்பது தமிழ்ச்சோலையின் சிறப்பம்சமாகக் கருதப்படுகிறது. அரபு, கன்னடம், சீனம் உட்பட 17 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்கள் அங்குக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பழங்காலத் தமிழ் எழுதப்பட்டுள்ள பனையோலைகளையும் மக்கள் இங்குக் காணலாம். மேலும், பூட்டுத் தயாரித்தல், பானை வனைதல், சிற்பக்கலை, நடனக்கலை எனத் தமிழர் பண்பாட்டின் பல்வேறு கூறுகளையும் கொண்டுள்ளது இப்பகுதியில் உள்ள காட்சிப்பேழை.
புலம்பெயர் தமிழர்களின் இலக்கியங்களைக் காட்டும் 'குரல்கள்' கண்காட்சியும் நூலகத்தில் இடம்பெற்றுள்ளது. 1800-களில் சிங்கப்பூர்த் தமிழர்களால் இயற்றப்பட்ட கவிதைகள், பக்திப் பாடல்கள் முதலியவற்றிலிருந்து சில பக்கங்கள் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
அதனைத் தொடர்ந்து, இரண்டாம் உலகப் போருக்குமுன் சமூகப் பிரச்சினைகளுக்குக் குரல் கொடுக்கத் தொடங்கப்பட்ட தமிழ்ப் பத்திரிகைகளின் ஆவணங்களையும், சமூக எழுச்சி நூல்களையும் இங்குக் காணலாம். நவீனக்காலச் சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய நூல்களையும் இக்கண்காட்சி கொண்டுள்ளது.

