நாட்டுப்புறக் கலைகளைத் தம் மகன் கற்றுக்கொண்டதைப் பார்த்த முனைவர் ச.ஜெகதீசன், அக்கலைகளைத் தாமும் முறையாகக் கற்றுக்கொள்ள வேண்டும் என விரும்பினார். ராஃபிள்ஸ் கல்வி நிலையத்தின் தமிழாசிரியராகிய முனைவர் ஜெகதீசன், தம் ஆசையை நிறைவேற்றிக்கொள்ள 2020-ஆம் ஆண்டு மதுரைக்குப் பயணப்பட்டார். அங்கு, நாட்டுப்புற மையம் ஒன்றில் மூன்று வாரங்களுக்குப் பறை, சிலம்பம், ஒயிலாட்டம் முதலான நாட்டுப்புறக் கலைகளின் அடிப்படையைக் கற்றுக்கொண்டார்.
இக்கலைகளைக் கட்டிக்காக்கும் அவசியத்தை இளையர்களுக்கு உணர்த்த விரும்பினார் ஆசிரியர். சிங்கப்பூருக்கு திரும்பிய பிறகு, தம் மாணவர்களுக்குப் பறை என்னும் இசைக்கருவியை அறிமுகம் செய்தார். அவருடைய மாணவர்களும் இந்த இசைக்கருவியைக் கற்றுக்கொள்ள பெரும் ஆர்வம் காட்டினர்.
இதைச் சிறந்த வாய்ப்பாகக் கருதி, முனைவர் ஜெகதீசன் பறை இசைக்கருவியை வாசிக்கும் முறையைக் தம் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கவும் பயிற்சியளிக்கவும் எண்ணினார். ராஃபிள்ஸ் கல்வி நிலையத்தின் முன்னாள் மாணவியும் பறை இசைக்கருவியை வாசிக்கும் அனுபவம் பெற்றவருமான அஷ்வினி செல்வராஜுடன் அவர் தொடர்புகொண்டார்.
பதின்ம வயதில் பாரம்பரிய இசைக்கருவிகளைக் கற்றுக்கொள்ளும் ஆர்வத்தைக் கொண்டிருந்த அஷ்வினி, 2022-ஆம் ஆண்டில் பறை இசைக்கருவியை வாசிக்கச் சிங்கையில் உள்ள மகூலம் கலைக்கூடம் என்ற கலைப்பள்ளியில் முறையாகக் அக்கலையைக் கற்றுக்கொண்டவர் ஆவார்.
பறை வாசிக்கும் திறனை நன்கு பெற்றிருந்த 25 வயது நிரம்பிய அஷ்வினி, ராஃபிள்ஸ் கல்வி நிலைய மாணவர்களுக்கு இரண்டு நாள்களில் இசைக்கருவியை வாசிக்கும் நுணுக்கங்களைக் கற்றுக்கொடுத்தார். மாணவர்கள் அந்த இரண்டு நாள்களில் காட்டிய ஈடுபாடு, அவருக்குப் பெரும் மனநிறைவைக் கொடுத்தது எனக் குறிப்பிட்டார்.
மேலும், இதுபோன்ற நாட்டுப்புறக் கலைகள் தமிழர்களின் பண்பாடு, அடையாளம், வரலாறு போன்ற முக்கிய அம்சங்களை உணர்த்துவதால் இளைஞர்கள் இக்கலைகளைக் கற்றுக்கொள்வது இன்றியமையாதது என்று வலியுறுத்தினார்.
பறை முதலிய பாரம்பரியக் கலைகள் உடலியக்கத் திறன்களை வளர்க்க உதவும் என்னும் காரணத்தால் இளம்வயதிலிருந்தே இவற்றைக் கற்றுக்கொள்வது சிறப்பு என்றும் அவர் விளக்கினார்.
இவரிடமிருந்து இப்புதுத் திறனைக் கற்றுக்கொண்ட மாணவர்கள் முதன்முதலாக ஆசிரியர் தின நிகழ்ச்சியின்போது பறை இசைத்தனர். மாணவர்களின் ஈடுபாடு முனைவர் ஜெகதீசனுக்குப் பெரும் ஊக்கம் அளித்ததால் வரும் ஆண்டுகளில் மற்ற நாட்டுப்புறக் கலைகளையும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளார்.
மாணவர்களுள் ஒருவரான ஆதர்ஷ் ஸ்ரீனிவாசன், நாட்டுப்புறக் கலையைக் கற்றுக்கொண்ட அனுபவத்தை எண்ணி மகிழ்ந்தார். மற்ற இளையர்களும் இத்தகைய அனுபவத்தைப் பெற வேண்டிய அவசியத்தைச் சுட்டிக்காட்டினார். இளையர்களுக்குத் தமிழர் பண்பாட்டின் சிறப்பை உணர்த்த, இதுபோன்ற அனுபவங்கள் பேருதவியாக உள்ளன என்று கூறினார்.

