'என் வாழ்வும் வளமும் தமிழ் தந்தவை'

'என் வாழ்வும் வளமும் தமிழ் தந்தவை'

2 mins read
c0147959-1cbd-47c5-9e60-fda25f94a97f
-

உளவியல் பாடத்தில் பட்டம் பெற்றிருந்தாலும், அத்துறை சார்ந்த வேலைவாய்ப்புகளைப் புறந்தள்ளி, தமிழின்மீது உள்ள பற்றைப் பிடித்துள்ளார் முஹம்மது அமீன். இவருக்கு 37 வயது. நாடக ஆசிரியராகவும், நடிகராகவும், இயக்குநராகவும் வலம் வரும் அமீன், ஊடகத் துறையில் காலெடுத்து வைத்துள்ளார். இவரது முடிவிற்குக் குடும்பத்தினரும் நண்பர்களும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனாலும், தமிழ்மீது வைத்திருந்த பற்றும் நம்பிக்கையும் தம் முடிவிருந்து பின்வாங்காமல் இருக்க அவருக்குக் கைகொடுத்தது. தமிழ் மீதான ஆழமான ஈடுபாடு, தமிழுக்கு இவரது பங்களிப்பு ஆகியவற்றுக்காகச் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் 2023- ஆம் ஆண்டு ஏற்பாடு செய்திருந்த கண்ணதாசன் விழாவில், இவருக்குக் கண்ணதாசன் விருது வழங்கப்பட்டது.

தம்மைப் போன்ற இளைஞர்களை அடையாளங்கண்டு அங்கீகரிப்பது, பெரிய ஊக்கத்தைக் கொடுக்கிறது என்கிறார் அமீன். தமிழ் சினிமாவில் அதிக நாட்டம் கொண்ட இவருக்குச் சிறு வயதிலேயே தமிழ் மீதான ஈடுபாட்டையும் நாடகங்களில் நடிக்கும் ஆசையையும் புகுத்தியவர் இவரின் தந்தை.

இந்த ஆசையை நிறைவேற்றும் விதமாக, சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத்தில் பட்டக்கல்வி மேற்கொண்டிருந்தபோது, 'சங்கே முழங்கு' கலைநிகழ்ச்சியில் முக்கியக் கதாபாத்திரத்தை ஏற்றுக்கொண்டார் அமீன். இந்த வாய்ப்பு, இவர் நாடகங்களில் பங்கேற்பதற்கு அடித்தளமாக அமைந்தது. தொடர்ந்து, அவாண்ட் நாடகக் குழு, ரவீந்திரன் நாடகக் குழு போன்றவற்றில் சேர்ந்து தமது நடிப்பு அனுபவத்தை மெருகேற்றிக்கொண்டார்.

பின்னர், நெடுந்தொடர்கள், நிகழ்ச்சிகளுக்குக் கதைகள், திரைக்கதை வசனங்கள், உரையாடல்கள் முதலிய படைப்புகளை எழுதத் தொடங்கினார். 'தீர்ப்புகள்' என்ற தகவல் கல்வித் தொடரின் ஒரு பகுதிக்கு உரையாடல், 'நினைவிருக்கும்வரை' என்ற அன்னையர் தினச் சிறப்புத் தொலைக்காட்சித் திரைப்படத்திற்கு வசனங்கள் ஆகியவை இவரது 25-க்கும் மேற்பட்ட படைப்புகளுள் சில.

தமிழ்மொழி மீதான பற்றுதான் இவரைத் தமிழில் படைக்கத் தூண்டியது. இத்தகைய மொழிப்பற்றை இளையர்களுக்குப் புகுத்தும் நோக்கில் இவர், "என்ரிச்மெண்ட் ஒர்க்ஸ்" என்ற பெயரில் பேச்சாற்றல், நாடகக்கலை தொடர்பான செறிவூட்டல் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இந்நிகழ்ச்சியின் மூலம், தமிழை ஆர்வமூட்டும் வகையில் இளையர்களுக்குக் கற்றுத்தருகிறார்.

இளைஞர்கள் தமிழ்மொழியை அதிகம் பயன்படுத்தாத இக்காலக்கட்டத்தில், அதன் சிறப்பை இன்றைய சூழலுக்கு ஏற்பச் செறிவூட்டல் நிகழ்ச்சிகளின் மூலம் புலப்படுத்த அமீன் முயல்கிறார். தமிழுக்கு மேலும் பணியாற்றும் விதத்தில், சுவாரசியமான நிகழ்ச்சிகளை நடத்தத் தேசிய நூலகத்துடனும் கல்வி அமைச்சுடனும் இணைந்து செயற்பட விரும்புகிறார் இவர். பாரதியார், கண்ணதாசன், நா. முத்துக்குமார் முதலிய கவிஞர்களின் படைப்புகளை மிகவும் ரசித்துப் போற்றும் அமீன், "இன்றுவரை, தமிழ் என்னைக் கைவிடவில்லை. இன்றும் பல வாய்ப்புகள், வாழ்வாதாரம், சமூகத்தில் ஓர் அடையாளம், மரியாதை எல்லாம் தமிழ் எனக்குத் தந்தவை," என்று பெருமிதத்துடன் கூறுகிறார்.