சிங்கப்பூரில் செழிக்கும் தமிழர் பண்பாடு

சிங்கப்பூரில் செழிக்கும் தமிழர் பண்பாடு

2 mins read
030eb5b4-c836-44e0-af8e-8b0971965b49
-

சிங்கப்பூரில் முதன்முறையாக தெற்காசிய வரலாற்று ஆய்வு, அரும்பொருளகம் குறித்த ஆலோசனைகளையும் வழிகாட்டலையும் வழங்கும் சேவையைத் தொடங்கியுள்ளார் அத்துறையில் கல்வி அறிவும் பதினெட்டு ஆண்டுகள் அனுபவமும் பெற்றுள்ள குமாரி நளினா கோபால்.

'அந்தாதி' எனும் வரலாற்று ஆய்வு, அரும்பொருளக ஆலோசனை நிறுவனம் தெற்காசியாவின் புலம்பெயர்ந்தோர் வரலாறு குறித்து ஆலோசனை வழங்குகிறது.

சர் ஸ்டாம்ஃபர்ட் ராஃபிள்சுடன் சிங்கப்பூரில் காலடி வைத்த நாராயண பிள்ளைபற்றி எல்லாருக்கும் தெரியும். ஆனால், எப்படி இருப்பார் என்று தெரியாது. கற்பனை கலந்த சிற்பங்களால் மட்டுமே அவரைக் கண்டறிகிறோம். இத்தகைய முக்கிய மனிதர்களின் விவரங்கள் கிடைக்காமல்போனது எதனால், தங்களது வரலாற்றை அவர்கள் எவ்வாறு எழுதி இருப்பார்கள் எனப் பல கேள்விகள் குமாரி நளினாவிடத்தில் உள்ளன. அவை, இவரது வரலாற்று ஆய்வுப் பயணத்திற்கு உரமளித்து வருகின்றன.

"வரலாறு என்னும்போது அதற்கு ஆதியும் இல்லை; அந்தமும் இல்லை. 'அந்தாதி' என்னும் கவிதை வடிவத்தை அறிமுகப்படுத்திய காரைக்கால் அம்மையாரும் தெற்காசிய வரலாற்றில் முக்கிய இடம்பெறுகிறார். என்றும் நின்றுவிடாத வரலாற்றுப் பயணத்தின் இயல்பு கருதி, 'அந்தாதி' எனப் பெயர் சூட்டி, வரலாறு குறித்த ஆலோசனை நிறுவனத்தைத் தொடங்கியுள்ளேன்," என்றார் தன்னார்வ ஆய்வாளராகிய 38 வயது குமாரி நளினா.

இந்திய மரபுடைமைக் கழகத்தை வடிவமைப்பதிலும் பொருள்களையும் தகவல்களையும் தேடித் திரட்டுவதில் தொடக்கக்கால ஆய்வாளராகவும் பணியாற்றினார் நளினா. இவர் சிங்கைவாழ் தமிழர்கள் வரலாற்றை மீட்டெடுப்பதில் குறிப்பிடத்தக்கவராகப் பங்காற்றியுள்ளார். சிங்கப்பூர் இந்தியர்கள், தமிழர்களது வரலாற்றைப் பற்றிய பல அரிய தகவல்களை இவர் கண்டறிந்துள்ளார்.

வளமிகு தமிழர் வரலாற்றை முழுமையாக ஆவணப்படுத்தத் தேவையான பதிவுகள் பல அழிந்தும் வீசியெறியப்பட்டும் கையில் கிடைக்காமல் போய்விட்டன என்பது வேதனை அளிப்பதாகப் பகிர்ந்துகொண்டார் குமாரி நளினா.

தமிழர் வரலாற்றில் நாட்டம் கொண்டுள்ள மற்றுமொருவர், குமாரி கீர்த்திகா ரவீந்திரன். கதை கேட்பதில் இவருக்குக் கொள்ளை ஆர்வம். அப்பா கூறிய பண்பாட்டுக் கதைகளைக் கேட்டுப் பிரமித்துப்போவார். இக்கதைகள் மற்றவர்களுக்கும் பயனளிக்க வேண்டும் என்று எண்ணிய குமாரி கீர்த்திகா, கடந்த மூன்றாண்டுகளாகச் சமூக ஊடகங்களின்வழியே தமிழர் பண்பாட்டைக் கொண்டு சேர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

வலைப்பூவில் தொன்மக் கதைகள், தமிழர் திருவிழா குறித்த வரலாற்றுக் கதைகள் எனப் பதிவிட்டு வருகிறார். ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் எழுதப்படும் பதிவுகள் தமிழர்களையும் மற்ற இனத்தவரையும் ஈர்க்கின்றன. இருமாதக் கால ஆராய்ச்சியின் பயனாக விளைந்தது, பலரின் கவனத்தையும் ஈர்த்த குமாரி கீர்த்திகாவின் 'திரௌபதியின் தீமிதி' என்ற தொடர். சிங்கப்பூரில் தீமிதித் திருவிழா தொடக்கக் காலத்திலிருந்து நடைபெற்று வருகின்றது. அதன் வரலாற்றை ஆவணங்கள், வாய்வழிக் கதைகள்மூலம் அவர் பதிவுசெய்துள்ளார்.

இவ்வழிகளில், சிங்கப்பூர்த் தமிழர்கள் தங்களின் பண்பாட்டைத் தொடர்ந்து நிலைநாட்டி வருகின்றனர். அதுகுறித்து விழிப்புணர்வையும் பரப்பி வருகின்றனர்.