தமது தந்தை சிறுவயதில் கூறிய மகாபாரத, ராமாயணக் கதைகள் திரு பார்கவ் மனத்தில் ஆழப் பதிந்தது. மனத்துக்கு நெருக்கமான அக்கதைகளைத் தமது பள்ளிப் பருவத்தில் தொடர்ந்து வாசித்தார் பார்கவ் (படம்). அவையே அவர் பின்பற்றிய அறநெறிக் கோட்பாடுகளைச் செதுக்கியதெனப் பின்னர் அவர் உணர்ந்தார். இக்கட்டான சூழ்நிலைகளைக் கையாள்வதற்கும் முடிவெடுப்பதற்கும் பயன்பட்டுள்ள இந்த இதிகாசப் பாடங்கள், அவருள் வாசிப்புப் பழக்கத்தைத் தோற்றுவித்தோடு ஏற்கெனவே மனத்தில் கொண்டிருந்த நாடகப் படைப்பாளர் என்னும் உணர்வையும் தட்டி எழுப்பின.
"தமிழில் சிந்திக்கப் பழகினால் நமது வாழ்க்கையுடன் கலந்துவிடுகிறது அம்மொழி. அதற்கு வாசிப்பு மிக அவசியம் என்றே கருதுகிறேன். அதனால் தொடர்ந்து படித்துக்கொண்டிருக்கிறேன்," என்றார் பொதுச் சேவைத் துறையில் பணிபுரியும் திரு பார்கவ், 29.
உயிர் அறிவியலாளர் திரு இளவழகன் முருகனுக்கு, நாடகக் கர்த்தாவாக மற்றொரு முக்கியப் பரிமாணமும் உள்ளது. இதற்கு வித்திட்டது, அவர் தமது கூட்டுக்குடும்பத்தில் கேட்டு வளர்ந்த தமிழ்க் கதைகளே.
பிள்ளைகளுக்கும் இந்த அனுபவத்தை வழங்கும் ஆர்வத்தில் கதை சொல்லுதலை வலியுறுத்தி வருகிறார் திரு இளவழகன். திருக்குறளின் முதல் குறளையொட்டியே இரு மகன்களுக்கும் பெயர் சூட்டியுள்ளார் திரு இளவழகன். அகரன் இளங்கதிர், ஆதிரன் இனியன் என்ற அவரின் மகன்களிடத்தில் தமிழைப் புகட்டுவதை முக்கியக் கடமையாக இவர் கருதுகிறார்.
"நமது பெயரே நமது வாழ்நாள் அடையாளம். பள்ளிப்பருவத்திலிருந்தே எனது பெயரைப் பலரும் ரசித்துப் பாராட்டுவது உண்டு. அவ்வாறே பொருள்நிறைந்த பெயரை என் மகன்களுக்குச் சூட்ட விரும்பினேன்," என்றார் திரு இளவழகன், 42.
தமிழ்ச் சமூகம் சிங்கப்பூரில் தனித்துவமான சிக்கல்களையும் அனுபவங்களையும் கொண்டது என்பது இளையர் அஷ்வாணி அதிகம் அலசி ஆராய்ந்த ஒன்றாகும். தம்மிடம் இருந்த அடையாளம் குறித்த தேடலை நிறைவுசெய்யும் தளமாக விளங்கியது, நாடகத்துறை. கவிதையும் நாடகமும் அஷ்வாணியின் உணர்ச்சி வெளிப்பாட்டுக் கருவிகள். இருமொழிப் படைப்பாளராக வலம்வருபவராக, இனவாதம் போன்ற விவகாரங்கள் தாய்மொழியில் படைக்கப்படும்போது தரும் அனுபவம் மாறுபட்டது என உணர்கிறார்.
அதன் விளைவாக 2017-இல் உருவானதே, அஷ்வாணியின் 'பழுப்பு' எனும் நாடகம். புலம்பெயர்ந்தோரின் தேடல், தமிழர்களின் அடையாளம் ஆகியன இந்த நாடகப் படைப்பின் சாராம்சம்.
"தமிழில் எழுதுவதற்கு வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. அவற்றை இளைஞர்கள் பயன்படுத்தும்போது தமிழர் குறித்த சமூகப் புரிந்துணர்வை மேம்படுத்தலாம்; தவறான கண்ணோட்டம் மாறலாம். அவ்வல்லமையை நாம் பெற்றிருக்கிறோம் எனத் தெரிய வரும்போது மொழி மீதான பற்று வலுப்படுகிறது," என்றார் 32 வயது அஷ்வாணி அஷ்வத்.

