நட்புறவுகளை உளவியல் ஆய்வாளர்கள் பல ஆண்டுகளாக ஆராய்ந்து வருகின்றனர். நண்பர்கள் ஒருவரின் மனத்தையும் எண்ணங்களையும் எப்படி மாற்றுகின்றனர்? நமது உடல் ஆரோக்கியத்தையும் மன ஆரோக்கியத்தையும் நட்பு எவ்வாறு பாதிக்கின்றது? இக்கேள்விகளுக்கு விடை காண ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அமெரிக்க உளவியல் சங்கம் இத்தகைய அறிவியல் ஆய்வுகளைச் செய்துள்ளது. நல்ல நட்பு நம்மை பல்வேறு மனநோய்களிலிருந்து பாதுகாக்கிறது என அச்சங்கம் அறிந்துள்ளது. பதற்றம், ஆழ்ந்த சோகம் முதலிய மனநோய்கள் நமது ஆரோக்கியத்தை வெகுவாகப் பாதிக்கக்கூடும். நமது அன்றாட நடவடிக்கைகளுக்கு இடையூறாய் அமையக்கூடும். அன்பும் ஆதரவும் வழங்கும் நல்ல நண்பர்கள் இருப்போருக்கு இத்தகைய நோய்கள் ஏற்படுவதன் சாத்தியம் குறைவாக இருக்கலாம் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், தீய நட்புகள் இருப்போரின் ஆயுள்கூடக் குறையக்கூடும் என அச்சங்கத்தின் ஆய்வு காட்டுகிறது.
இதற்கு முக்கியக் காரணம், நல்ல நட்பு நமது மன உளைச்சலைக் குறைக்க உதவுகிறது. மன உளைச்சல் ஏற்படும் சமயத்தில், ஒரு நல்ல நண்பர் அருகில் இருக்கும்போது அச்சிக்கல் பூதம்போல் தெரிவதில்லை. அந்த நண்பருடன் சிக்கலைப்பற்றி மனம்விட்டுப் பேசும்போது, அதைத் தீர்ப்பதற்கான நம்பிக்கை வலுப்படுகிறது.
குறிப்பிட்ட ஓர் ஆய்வில், நபர்கள் சிலர் தனியாகவும் பின்னர் நண்பர்களுடனும் ஒரு மலையில் ஏறினர். அதில் பலரும், நண்பர்களுடன் அதே மலையை ஏறியபோது அது இன்னும் சுலபமான காரியமாக தென்பட்டது எனத் தெரிவித்தனர். இவ்வகையில், நம் மனம் நண்பர்கள் இருக்கும்போது மாறுபட்ட விதத்தில் இயங்குகிறது. பல ஆண்டுக்காலமாக நமக்கு பள்ளியிலோ வேலையிடத்திலோ அன்றாடம் நாம் காணக்கூடிய நண்பர்கள் நமது மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றனர். ஆனால், அதைத் தாண்டி, அறியாத நபர்களுடன் குறைந்த நேரத்தில் ஏற்படும் தற்காலிக நட்புக்கூட நமக்கு மகிழ்ச்சியூட்ட வல்லது. இந்த நட்புக்கள் எதிர்பாராமல் ஏற்படுபவை.
உதாரணத்திற்கு, பொதுப் போக்குவரத்தில் அல்லது கடைகளில் சந்திப்போருடன் சற்று நேரம் உரையாடுவதும் மனத்தைச் சாந்தப்படுத்தும். அதோடு, அடுத்து வரும் நிகழ்வுகளை இன்னும் எளிதாகச் சமாளிக்க இந்த மனநிலை உதவும். தற்செயலாகவும் தற்காலிகமாகவும் வளர்த்துக்கொள்ளும் நட்பு இத்தகைய நன்மைகளைக் கொண்டுள்ளது ஆச்சரியமே.
வெளியில் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடந்த நோய்ப்பரவல் காலத்தில் இத்தகைய நட்புகள் குறைந்திருக்கும். பொதுவாகவே அச்சமயத்தில் சமூக இணக்கமானது எல்லோரிடத்திலும் குறைந்திருந்தது. யாரிடமும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும், முகக்கவசம் அணிந்துதான் பேசவேண்டும் எனப் பல விதிமுறைகள் இருந்தன. தற்போது மெல்ல இயல்புநிலைக்கு உலகம் திரும்பிக் கொண்டிருக்கிறது. ஆனால், நோய்ப்பரவல் காலத்திலிருந்தது போலவே சமூக இணக்கம் குறைவான அளவில் காணப்படுகிறது. நட்புகளின் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டு இந்நிலையை மாற்றுவது அவசியம் என்பது உளவியல் நிபுணர்களின் கருத்து.

