அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே தோழியே!

அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே தோழியே!

2 mins read
8ff63aa2-4bf1-4d72-92a1-35ed83241349
- The Straits Times
Google News Preferred Icon

சிறு வயதில் உற்ற தோழிகளாகப் பழகி, பின்னர்ப் பிரிந்துவிட்ட திருவாட்டி சாந்தா குருநாதன், திருவாட்டி அலிஜா பாஜி ஆகிய இருவரும் 45 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் இணைந்துள்ளனர். அவர்கள் மீண்டும் சந்தித்ததோ, முற்றிலும் எதிர்பாராத ஒரு சந்தர்ப்பத்தில்தான்!. 

கணவரின் மறைவுக்குப்பின் தனியாக வாழ்ந்து வந்தார் 68 வயது சாந்தா. அவரின் வீட்டிற்கு என்டியுசியின் தோழமைத் திட்டத்தின் தொண்டூழியராகக் கடந்த ஆண்டு சென்றிருந்தார் அலிஜா. உணவுப் பொருள்களை விநியோகம் செய்வதற்காகச் சென்றபவர்   முதலில் திருமதி சாந்தாவை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. இருவரும் சகஜமாகவே பேசிக்கொண்டனர்.    

அலிஜா, ‘சாந்தா’ என்ற தம்முடைய உற்ற தோழியின் கடந்தகால நினைவுகளைத் திருவாட்டி சாந்தாவுடன் பகிர்ந்துகொண்டார். அச்சமயத்தில்தான், ‘ஜா’ என்று தாம் செல்லமாக அழைக்கும் உயிர்த் தோழியை அடையாளம் கண்டு மெய்சிலிர்த்துப் போனார் சாந்தா. ஆனந்தத்தில் அலிஜாவைக் கட்டித் தழுவி அழுததாக அவர் கூறினார். 

சாந்தா மற்றவர்களுடன் எப்போதுமே மிக நட்பாகப் பழகும் குணமுடையவர் என்று அலிஜா கூறினார். கடந்த மூன்றாண்டுகளாக என்டியுசியின் தோழமைத் திட்டத்தில் தொண்டூழியராக இருந்துவருகிறார் இவர். 

“முன்பு சாந்தாவுக்கு நீளமான முடி இருக்கும். அவர் இருக்கும் இடத்தில் பலத்த சிரிப்பொலி கேட்டுக்கொண்டே இருக்கும். அவரது மலர்ந்த முகம் மட்டும் இன்னும் மாறவில்லை,” என்று கூறிச் சிரித்தார் அலிஜா.

அலிஜாவும் சாந்தாவும் பதின்ம வயதிலிருந்தே புக்கிட் மேரா பகுதியில் அமைந்திருந்த ‘நேஷனல் செமிகான்டக்டர்’ தொழிற்சாலையில் இணைந்து பணிபுரிந்து வந்தனர். மேலும், திருவாட்டி ஃபரிதா லாவி, திருவாட்டி ஜெயமணி ஆகியோரைச் சேர்த்து, இந்நால்வரும் 1970களில் சில ஆண்டுக்காலமாய் இணைபிரியாத தோழிகளாக இருந்தனர்.

இவர்களின் இளமைக்காலம் தினமும் தொழிற்சாலைக்கு அருகே இருந்த உணவங்காடியில் பொழுதைக் கழிப்பது, வீட்டிற்கு ஒன்றாக நடந்து செல்வது, கொண்டாட்டங்களுக்குச் சேர்ந்து செல்வது, பெற்றோருக்குத் தெரியாமல் வெளியே சுற்றுவது என உல்லாசமாய்க் கழிந்தன. திருமணமான பின்னர் நால்வரும் நான்கு திசைகளில் சென்றுவிட்டனர். தம்முடன் இந்நாள்வரை தொடர்பில் இருக்கும் ஃபரிதாவையும் அண்மையில் சாந்தாவின் வீட்டிற்கு அழைத்துச் சென்றார் அலிஜா.

“திருமணமான பிறகு நான் என் நண்பர்களுடன் தொடர்பில் இல்லை. உயிர்த்தோழிகளான இவ்விருவரையும் மீண்டும் பார்த்தபின் எங்களின் இளமைக்கால நினைவுகள் திரும்பின. புத்துயிர் பெற்றது போன்று இருக்கிறது,” என்று நெகிழ்ந்தார் சாந்தா.

ஒருகாலத்தில் மிகத் துடிப்பாகவும் குறும்புத்தனமாகவும் இருந்த சாந்தா, ஈராண்டுகளுக்கு முன்னர் கணவர் மறைந்தவுடன் சற்று முடங்கினார். கணவரின் நினைவுகளுடனும் மிகச் செல்லமாக வளர்க்கும் தம் செடிகளுடனும் இன்று தனியாக வாழ்ந்து வருகிறார் சாந்தா.

கால்கள் இரண்டிலும் வீக்கம் ஏற்பட்ட காரணத்தினால் முன்புபோல அவரால் இயல்பாக நடக்க முடிவதில்லை. விரும்பிச் செய்யும் சமையலிலும் அவரால் ஈடுபட முடிவதில்லை. திருமணமான இரு பிள்ளைகளையும் அவர் அவ்வப்போது சந்திப்பதுண்டு. இத்தகைய தனிமையான சூழலில் மாதம் இருமுறை தம்மை வந்து சந்திக்கும் இரு தோழிகளையும் சாந்தா நம்பிக்கைத் தூண்களாகக் கருதுகிறார்.