‘வசிப்பிடச் சூழல் மேம்பாட்டில் அனைவருக்கும் பங்குண்டு’

‘வசிப்பிடச் சூழல் மேம்பாட்டில் அனைவருக்கும் பங்குண்டு’

2 mins read
d15a99f9-8721-4d33-bdc2-f8d923efdf86
- Pixabay

அண்டை வீட்டுக்காரர்களால் ‘ஆண்டி ரோஸ்’ என்று செல்லமாக அழைக்கப்படுகிறார் 82 வயது திருவாட்டி ராசம்மாள் நடேசன். இவர், பக்கத்து வீட்டுக்காரர்களுடன் நட்புப் பாராட்டி மகிழ்ச்சியாக வாழ்வதற்கு வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார். இந்த வயதிலும் துடிப்பாக செயற்பட்டுவருவதோடு தமது அண்டைவீட்டுக்காரர்களைக் கண்ணும் கருத்துமாய்ப் பார்த்துக்கொள்கிறார். 

முதிய அண்டை வீட்டுக்காரர்களைச் சந்தித்தல், அவர்களுடன் தமது உணவைப் பகிர்ந்துகொள்ளுதல், அக்கம்பக்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க அவர்களுக்கு அழைப்பு விடுத்தல் ஆகியவை திருவாட்டி ராசம்மாளின் வழக்கமான பணிகள். இப்பணிகளால் அண்டைவீட்டார்களின் அன்பையும் பாசத்தையும் ராசம்மாள் வென்றுள்ளார். நல்ல நட்பினையும் அவர்களுடன் வளர்த்துக்கொண்டுள்ளார் அவர். 

ராசம்மாளின் அண்டை வீட்டுக்காரரான திருவாட்டி லிம்மின் தந்தை நோயுற்ற பிறகு அவருடன் நெருங்கிய நட்புப் பாராட்டினார் ராசம்மாள். அவரிடம் பரிவு காட்டி அவரது தேவைகளை அறிந்துகொண்டார். லிம் தமது தந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்போதெல்லாம் அவரது வீட்டை ராசம்மாள் கவனித்துக்கொள்வார். ராசம்மாளின் நட்பால் நெகிழ்ந்துபோன திருவாட்டி லிம், அவரை வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் நல்ல அண்டைவீட்டார் விருதுக்குப் பரிந்துரைத்தார்.

பொங்கோலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நல்ல அண்டைவீட்டார் விருது பெற்ற 14 பேரில் திருவாட்டி ராசம்மாளும் ஒருவர். 2009ஆம் ஆண்டுமுதல்   இந்தப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. 2019-ஆம் ஆண்டு போட்டிக்குச் சாதனை அளவாக 3,052 பரிந்துரைகள் கிடைத்தன. அதில் பொதுப் பிரிவில் ஐந்து, தொடக்கப்பள்ளி மாணவர் பிரிவில் மூன்று, உயர்நிலைப் பள்ளிப் பிரிவில் மூன்று, உயர்நிலைப் பள்ளிக்குப் பிந்திய பிரிவில் மூன்று என மொத்தம் 14 விருதுகள் வழங்கப்பட்டன.

மிகவும் துடிப்பான பள்ளிகளாக ரிவர் வேல் தொடக்கப் பள்ளியும் ஹுவா யி உயர்நிலைப் பள்ளியும் சிறப்பு விருதுகள் பெற்றன. இவ்விருதுகள் மக்களிடத்தில் பொதுநலப் பண்புகளை விதைக்கவும் ஊக்குவிக்கவும் முயல்கின்றன. அண்டைவீட்டார்களுடன் நெருங்கிப் பழகும் கலாசாரத்தை உருவாக்கவும் இத்தகைய நிகழ்வுகள் உதவுகின்றன. 

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தேசிய வளர்ச்சி, மனிதவள துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது, “வசிக்கும் சூழலை மேம்படுத்துவதில் அனைவருக்கும் பங்குண்டு. இதன்மூலம் ஒற்றுமையான, பரிவுமிக்க சமூகத்தை ஒன்றிணைத்து முன்னேற்றவும் வாய்ப்பு உண்டு,” என்றார்.

தொடக்கப் பள்ளிப் பிரிவில் விருது பெற்றார் சிறுமி சஹானா ரமேஷ். இவர் 2019-ஆம் ஆண்டில் தமது அண்டை வீட்டிலிருந்து புகை வெளிவருவதைப் பார்த்து உடனே காவல்துறையினரையும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையையும் அழைத்திருந்தார். இதன்மூலம், பெரிய தீச்சம்பவம் நிகழ்வதைத் தடுக்க அவர் உதவினார். அவரது தீரச் செயலைக் கண்டு மெச்சிய அவரது அண்டை வீட்டார்கள் அவரை விருதுக்குப் பரிந்துரைத்தனர்.

அன்றாட வாழ்வில் அண்டைவீட்டார்களுடன் பேசுவதுகூட இக்காலத்தில் அரிதாகிவிட்டது. பரபரப்பான வாழ்க்கைச் சூழலினால் நட்புப் பாராட்டுவதற்கு நேரம் குறைவாகவே உள்ளது. இருந்தும், தேவைப்படும் நேரங்களில் நமது அண்டைவீட்டார்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதன்மூலம் வசிப்பிடங்களை இன்னும் பாதுகாப்பானதாகவும் அன்பான ஒன்றாகவும் மாற்றலாம்.