தொழிலாளர்களின் தோழர்களாகத் தோள்கொடுக்கும் தலைவர்

தொழிலாளர்களின் தோழர்களாகத் தோள்கொடுக்கும் தலைவர்

2 mins read
32d0a038-d847-449d-ab97-1af2f4983d63
-

வேகமாக மாறிவரும் உலகப் பொருளாதாரச் சூழலில், சம்பளம், வேலைச்சூழல், ஓய்வூதியம் ஆகியவை தொடர்பில் பல நாடுகளில் மோதல் நிலவி வருகிறது. ஆனால், சிங்கப்பூரின் அணுகுமுறை வேறாக இருக்கிறது. சவால்களை எதிர்கொள்ள அரசாங்கத்துடனும் முதலாளிகளுடனும் கைகோத்துச் செயற்பட்டு வருகிறது சிங்கப்பூரின் தொழிலாளர் இயக்கம். 

சக ஊழியர்களின் நலன்களைப் பேணுவதற்காகச் சம்பள உயர்வு, நிம்மதியான வேலைச்சூழல் போன்றவற்றுக்காகப் பாடுபடும் பலர் நம்மிடையே உள்ளனர். அவர்களுள் ஒருவர், திரு பிரகாசம் முனிசாமி. தமது முப்பத்து இரண்டாவது வயதில் அவர் தொழிற்சங்கத்தில் சேர்ந்தபோது தொழிற்சங்கவாதிகள் முரட்டுத்தனமாகப் போராடுபவர்கள் என்று அவர் எண்ணியிருந்தார்.

பதினொரு வயதில் தாயாரை இழந்து, ஆறு சகோதரர்களுடன் பெரிய குடும்பத்தில் வளர்ந்தவர் திரு பிரகாசம். அவரது கரடுமுரடான வாழ்க்கை அனுபவம், சக ஊழியர்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளத் தேவையான மனப்பக்குவத்தைக் கொடுத்தது. இவரின் நடத்தைக்காகவும், தொழிலாளர்கள்மீதான அக்கறைக்காகவும் இவருக்குத் ‘தொழிலாளர்களின் தோழன்’ என்னும் நட்சத்திர விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. 

‘ஓ’ நிலை பயின்றபின் ‘வெல்டிங்’ எனப்படும் பற்றவைப்புத் தொழிலைச் செய்து வந்தார் திரு பிரகாசம். அத்தொழிலில் சிறந்து விளங்கி மூன்றாண்டுகளுக்குப் பிறகு பதவி உயர்வும் சம்பள உயர்வும் பெற்றார்.

திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டுமென விரும்பிய திரு பிரகாசம் 1996-ஆம் ஆண்டில் தொழிற்சங்கத்தில் சேர்ந்தார். கூடிய விரைவில், தொழிற்சங்கத்தில் தலைமைப் பொறுப்பு ஏற்கும்படி அவர் சங்கத்தினரால் கேட்டுக்கொள்ளப்பட்டார். நல்ல தொழிற்சங்கத் தலைவராகத் தம்மை உருவாக்கியது என்டியுசியே என்றார் திரு பிரகாசம்.

“கொவிட்-19 காலக்கட்டத்தில் ஊழியர்கள் சிரமப்பட்டபோது தொழிற்சங்கம் பெரிதும் கைகொடுத்தது,” என்றார் திரு பிரகாசம். ஆட்குறைப்பு நடவடிக்கைகளை நிறுவனம் எடுத்தபோது வேலை இழந்தவர்களுக்குரிய இழப்பீட்டைக் கூடுமானவரை பெற முயன்றதுடன் அவர்களுக்குப் புதிய வேலைகளைத் தேடவும் தொழிற்சங்கம் மூலமாக இவர் கைகொடுத்தார். இது வேலையிலிருந்து நீக்கப்பட்ட ஊழியர்களுக்குப் பெரிதும் உதவியாக இருந்து, அவர்களின் கவலைகளையும் போக்கியது.  தொழிலாளர்களின் நலன், தொழில்நலனைச் சார்ந்துள்ளதைப் புரிந்துகொண்டதால் திரு பிரகாசம் சுமுகமாகச் செயற்பட முடிந்தது. மேலும், தம்முடன் வேலை பார்ப்போருடன் நல்லுறவு வளர்த்துக்கொள்வதற்கு அவர் தொடர்ந்து முக்கியத்துவம் தந்து வந்தார். 

வேலையிட நிர்வாகிகள், மனிதவளப் பிரிவினர், அரசாங்க அதிகாரிகள், அரசாங்க ஊழியர்கள் ஆகியோருடனான பேச்சுவார்த்தைகள் தொழிலாளர் நலனை மேம்படுத்தும் என்பது இவரது கருத்து. உணர்ச்சிவயப்படாமல், தெளிவான சிந்தனையுடன் இக்கலந்துரையாடல்கள் நடைபெறவேண்டும் என்றும் அவர் எண்ணுகிறார்.