இன்றைய காலக்கட்டத்தில் இளைய தலைமுறையினர் தங்கள் கல்வியின்மீது மட்டும் கவனம் செலுத்தாமல், பிறர் நலன் பேணும் நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றனர். அவ்வாறு சமூகப் பணிகளில் தீவிரம் காட்டும் நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்கள் இருவருக்கு அண்மையில் விருது வழங்கப்பட்டது.
கல்வி, இணைப்பாட நடவடிக்கைகளுடன் சமூகப் பணியிலும் சிறந்து விளங்குகிறார் 18 வயது குழந்தை வேலுடையார் செந்தில்குமார் கெளதம். இவர், நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியின் இந்த ஆண்டுக்கான ‘சேர்மன்’ விருதை வென்றுள்ளார். ஜூலை 13ம் தேதி நடைபெற்ற விழாவில் அவர் இவ்விருதைப் பெற்றார்.
உயர்நிலைப் பள்ளிக் காலத்தில் ‘லியோ கிளப்’ என்னும் சமூக சேவை அமைப்பில் தொண்டாற்றிய கெளதம், ‘கூல் சயன்ஸ் இன்டர்நேஷனல்’ என்னும் லாபநோக்கமற்ற அமைப்பை நண்பர்களுடன் சேர்ந்து தொடங்கினார்.
கௌதமுவுக்கு ஐக்கிய நாட்டுச் சபையின் பாவனைக் கலந்துரையாடலில் பங்கேற்கும் வாய்ப்புக் கிடைத்தபோது, அதில் கல்வி உள்ளிட்ட சமூக வளர்ச்சிக்கான தலைப்புகளை விவாதித்து, உரிய தீர்வுகளை அவர் முன்வைத்தார். அந்தத் தீர்வுகள் நம்பிக்கைகளாகவே இருப்பதால் பயன் இல்லை என்று அவர் அச்சமயத்தில் உணர்ந்தார். உலகெங்கிலும் பல மில்லியன் குழந்தைகள் கல்வி பயிலாமல் இருக்கின்றனர், அதற்கான காரணம் என்ன, அதை எப்படி மாற்றலாம் முதலிய கேள்விகள் அவருக்குள் எழுந்தன. அதுவே இந்தத் தொண்டு அமைப்பைத் தொடங்கக் காரணமாக அமைந்தது.
தனிப்பட்ட ஒருவரின் வளர்ச்சிக்கும் சமூக வளர்ச்சிக்கும் கல்வியே சிறந்த பாதையாக இருக்க முடியும் என்று கருதுகிறார் கௌதம். எனவே, கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறுவதையும் கல்வி தொடர்பான சேவைகள் ஆற்றுவதையும் இந்த அமைப்பின் மூலம் மேற்கொள்கிறார்.
பிலிப்பீன்ஸ், இந்தோனீசியா, மலேசியா முதலிய நாடுகளில் உள்ள நண்பர்களை இணைத்து, உலக வெப்பமயமாதல் போன்ற உலகளாவிய பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்குகளையும் வழிநடத்துகிறார்.
“நீங்கள் கற்றுக்கொண்டதை அடுத்தவருக்குச் சொல்லிக் கொடுங்கள்; அவர்களையும் அடுத்தவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கும்படி சொல்லுங்கள்; இம்முறையில் கற்றல் சுழற்சி ஏற்பட்டு மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும்,” என்றார் கெளதம்.
கௌதம்மைப் போல, நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் பயிலும் 21 வயது கிளாடியா ரூத் செல்வகுமாரும் சிறந்த சமூக ஈடுபாட்டாளருக்கான விருதைப் பெற்றுள்ளார். இவர் சமூக சேவைப் படிப்பை மேற்கொண்டுள்ளார்.
சிறுவயதில் திறன்களை வளர்த்துக்கொள்ளத் தமக்குப் பல்வேறு வாய்ப்புகள் கிடைத்தபோதும் பின்தங்கிய மாணவர்கள் பலருக்கு அவ்வாறு கிடைக்காததை அவர் அறிந்தார். அதனால் வேலைவாய்ப்புகளை அவர்கள் கண்டறிவதற்கான உதவிகளைச் செய்கிறார். தொழில்நுட்பக் கல்வி பயின்ற காலத்தில், மாணவர் அமைப்பில் இணைந்து பல்வேறு கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளார்.
லாப நோக்கமற்ற ‘ஆக்சஸ்’ நிறுவனத்தின் தொடர்புத்துறையில் தொண்டாற்றும் கிளாடியா, மாணவர்களுக்கு வழிகாட்டிகளை அறிமுகம் செய்வதில் பங்காற்றி வருகிறார். மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த வாழ்க்கையை உருவாக்கிக்கொள்வதே சிறந்த சமூகத்திற்கு அடித்தளமிடும். அவ்வாழ்க்கையை உருவாக்குவாதில் தாம் பங்காற்ற வேண்டும் என்பது இவரின் விருப்பம்.
மேலும், மனநல விழிப்புணர்வைப் பரப்பும் நோக்குடன், ‘டெலிகிராம்’ தளம்மூலம் இயங்கிவரும் தமது சேனலில் மனநல மேம்பாட்டுக்கான வழிமுறைகள், ஊக்கத்துடன் செயலாற்றுவதற்கான குறிப்புகள் ஆகியவற்றைப் பகிர்ந்து வருகிறார். 400க்கும் மேற்பட்டோர் இதன்வழியே பலனடைந்தும் வருகின்றனர். எதிர்காலத்தில் சமூக சேவை அமைப்பு ஒன்றைத் தொடங்க வேண்டும் என்பதே கிளாடியாவின் குறிக்கோள்.

