குடும்பப் பிணைப்பை வலுப்படுத்தும் தொண்டூழியம்

குடும்பப் பிணைப்பை வலுப்படுத்தும் தொண்டூழியம்

3 mins read
bffb2b6d-0558-4b40-a749-8a30b3c2d80c
- அருண்ராஜ் சிதம்பரம்

பரபரப்பான வாழ்க்கைச் சூழலால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தங்களின் வேலை, பள்ளி அலுவல்கள் முடிந்து வீடு திரும்பியதும் தத்தம் சொந்தப் பணிகள் குறித்துக் கவனம் செலுத்தும் நிலைக்கு ஆளாகின்றனர்.  குடும்பத்தாரிடையே   பிளவு ஏற்பட இது காரணமாகிவிடுகிறது. வைத்த கண் வாங்காமல் திறன்பேசித் திரைகளைப் பார்க்கும் போக்கும் குடும்பங்களில் காணப்படுகிறது. 

இருப்பினும் சிலர் தங்களின் குடும்ப உறுப்பினர்களுடன் ஒன்றாகப் பொழுதைக் கழிப்பதுடன் நின்றுவிடாமல் உன்னதத் தொண்டூழியப் பணியிலும்  குடும்பமாக ஈடுபடுகின்றனர். இவ்வாறு தொண்டூழியத்தில் ஈடுபடுவதால் குடும்ப உறவு மேம்படுவதாகவும் மிகுந்த மனநிறைவு கிடைப்பதாகவும் கூறும் ஒரு குடும்பத்தின் அனுபவங்களை அறிந்து வந்தது தமிழ் முரசு. 

1996ஆம் ஆண்டில் திருவாட்டி செல்வராணி,(52), அவர்களால் வித்திடப்பட்ட தொண்டூழிய மனப்பான்மை 27 ஆண்டுகள் கழித்தும் அவரது குடும்பத்தில் நிலைத்து நிற்கிறது. அவரது வழியில் பிள்ளைகள் ஐவரும் தொண்டூழியத்தைத் தங்களின் வாழ்வில் ஒரு முக்கிய நடவடிக்கையாக வைத்துக்கொண்டனர்.

இல்லாதவர்களுக்கு முடிந்தவரை கைகொடுத்து, அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும் என இலக்குக் கொண்டுள்ள திருவாட்டி செல்வராணி, தொண்டூழியத்தில் இறங்கியபோது மூன்று குழந்தைகளுக்குத் தாயாக இருந்தார். புக்கிட் பாஞ்சாங் இளையர் கட்டமைப்பில் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்று   நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது போன்றவற்றில் முதலில் ஈடுபட்டார்.

தொண்டூழியத்திற்கு நேரம் ஒதுக்கியபோதெல்லாம் மூன்று பிள்ளைகளையும் கூடவே அழைத்துச் சென்ற திருவாட்டி செல்வராணிக்கு அவரது கணவர் பெருந்துணையாக இருந்து ஆதரவு வழங்கினார். 

2018ஆம் ஆண்டில் புக்கிட் பாஞ்சாங் சமூக நிலைய மேலாண்மைக் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்ற திருவாட்டி செல்வராணி, சிண்டா எனும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தோடு இணைந்து வாசிப்புத் திட்டங்களைச் சமூகத்திற்கு அறிமுகப்படுத்தினார். 

தொண்டூழியத்தின்மூலம் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டதோடு, பொறுமை, பிறருடன் எவ்வாறு உரையாடுவது போன்ற திறன்களைக் கற்றுக்கொண்டதாகத் திருவாட்டி செல்வராணி பகிர்ந்துகொண்டார். 

தொண்டூழியத்தில் முன்மாதிரியாக இருக்கும் தம் தாயாரைப் பிரதிபலிக்கும் விதத்தில் மூத்த மகள் 28 வயது ரோஸ்பிரியா சிதம்பரம் 15 வயதில் தொண்டூழியத்தில் அடியெடுத்து வைத்தார். குடும்பத்தோடு இணைந்து பல தொண்டு நடவடிக்கைகளில் ஈடுபட்ட ரோஸ்பிரியா, தற்போது இளையர்கள் பலரும் தொண்டூழியம் புரிய முன்வருகின்றனர் என்றார். 

முனைவர் பட்டம் பயின்று வரும் திருவாட்டி செல்வராணியின் இரண்டாவது மகனான 27 வயது அருண்ராஜ் சிதம்பரம், தமது 15 வயதில் தொண்டூழியத்தில் இறங்கினார். நேரத்தை நன்கு வகுத்து வாரத்தில் ஒருநாளாவது தொண்டுக்கு அர்ப்பணித்து வருகிறார் திரு அருண்ராஜ். படிப்பு ஒருபுறம் தமது நேரத்தை ஆக்கிரமித்துக்கொண்டாலும் சமூகத் தொண்டாற்ற வேண்டும் என்ற காரணத்தினால் மட்டுமே அவர் நொடிப்பொழுதும் துவண்டுபோகாமல் முழுவீச்சாக அதில் இறங்கியுள்ளார்.

வீட்டில் மூன்றாவது பிள்ளையான திரு உதயநிதி சிதம்பரம், (21), அண்ணன் அருண்ராஜுடன் கைகோத்துச் சமூக நடவடிக்கைகளை ஏற்பாடு செய்து வருகிறார். பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு பயின்று வரும் உதயநிதி, பள்ளி விடுமுறையின்போது ரத்த நன்கொடை, பொது இடங்களில் இருக்கும் குப்பைகளை அகற்றுதல், வசதி குறைந்தோருக்கான உணவு இயக்கம் போன்றவற்றுக்கு ஏற்பாடு செய்கிறார். அவர் தற்போது தம் அண்ணனோடு இணைந்து ‘ஃபுட் ரெஸ்கியூ (Food Rescue)‘ என்னும் திட்டத்தை வழிநடத்தி வருகிறார்.

வீட்டின் கடைக்குட்டியான குமாரி திரெஷபிரியா சிதம்பரம், (18), மூன்று ஆண்டுகளுக்குமுன் தொண்டூழியத்தில் ஈடுபடத் தொடங்கியதுமுதல்   அதில் மிகுந்த நாட்டம் கொண்டுள்ளார். தம் வயது நண்பர்கள் பலர் பள்ளிகளில் செயற்படும் சமூக ஈடுபாட்டுத் திட்டத்திற்காக மட்டுமே தொண்டில் ஈடுபடுகிறார்கள் என்று கூறி,   குடும்பப் பிணைப்பை வலுப்படுத்த தொண்டு ஒரு வேராக நிற்கிறது என்றார்.