சிண்டாவின் இளையர் தலைமைத்துவக் கருத்தரங்கு

2 mins read
f8f34c67-14a4-4e58-869b-90a69991cb9f
- சிண்டா

இளையர்களிடையே தலைமைத்துவப் பண்புகளை வளர்க்கவும் சேவை மனப்பான்மையை விதைக்கவும் தொடங்கப்பட்டது, ‘சிண்டா இளையர் தலைமைத்துவக் கருத்தரங்கு’. ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்படும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுக் கழக (சிண்டா) இளையர் மன்றத்தின் இந்நிகழ்வு, ஈராண்டுகளுக்குப் பிறகு 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இடம்பெற்றது. 

பலதுறைத் தொழிற்கல்லூரி, தொழில்நுட்பக் கல்விக் கழகம், தொடக்கக் கல்லூரி ஆகியவற்றைச் சேர்ந்த மாணவர்கள் ஏறத்தாழ 50 பேர் இந்த மூன்று நாள் கருத்தரங்கில் கலந்துகொண்டு பல்வேறு குழு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். இந்தக் கருத்தரங்கு கடந்த ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதியிலிருந்து 19ஆம் தேதி வரை நடைபெற்றது.. 

  கடந்த ஆண்டுக் கருத்தரங்கில் முதல் முறையாகக் கலந்துகொண்ட தொழில்நுட்பக் கல்விக் கழக இரண்டாம் ஆண்டு மாணவர் தஷ்வின் விஜயகுமார், இக்கருத்தரங்கு தமது கண்ணோட்டத்தை மாற்றியமைத்ததாகக் கூறினார். பலதரப்பட்ட குடும்பப் பின்னணிகளிலிருந்து வந்திருந்த இளையர்களைச் சந்திக்க இந்நிகழ்வு வாய்ப்பளித்ததாகவும் அவர் தெரிவித்தார். 

“குறைந்த வருமானக் குடும்பத்தைச் சேர்ந்த எனக்கு,   அது குறித்து ஒருவகைத் தாழ்வு மனப்பான்மை இருந்தது.    ஆனால், சிண்டாவின் கருத்தரங்கில் என்னைப் போன்ற பின்னணியிலிருந்து வந்திருந்த   இளையர்கள் பலரைச்   சந்தித்தேன். அவர்களுடன் உரையாடியது எனக்கு ஊக்கமளித்துள்ளது,” என்றார் அவர். 

முதல் நாளன்று, சுய புரிதலுக்கான வழிகாட்டுதலை வழங்கும் நோக்கில், குழுக் கலந்துரையாடல்கள் முதலிய நடவடிக்கைகள் இடம்பெற்றன. 

வெளிநாட்டு ஊழியர்கள், குறைந்த வருமானக் குடும்பங்கள் ஆகியோரை நேரடியாகச் சென்று சந்தித்து, அவர்களது பிரச்சினைகளைக் கேட்டுத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு மாணவர்களுக்கு இரண்டாம் நாளன்று கிட்டியது. 

இத்தகைய சமூக சிக்கல்களைக் களைவதற்கான வழிமுறைகளையும் தீர்வுகளையும் மாணவர்கள் மூன்றாம் நாளன்று விரிவான திட்டங்களின் மூலம் முன்வைத்தனர். 

“பள்ளி முகாம்களைப் போலன்றி, வேறுபட்ட, முழுமையான ஓர் அனுபவத்தைத் தர நாங்கள் முயன்றிருந்தோம். சுய பரிசீலனை, எண்ணப்பிரதிபலிப்பு ஆகியவற்றுக்கும் ஒவ்வொருநாளும் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதன்மூலம், மாணவர்களிடத்தில் தன்னம்பிக்கையை ஏற்படுத்தவும் வசதியோ வருமானமோ இல்லாத சூழ்நிலையிலும் சமூக சேவையில் ஈடுபடலாம் என்னும் கருத்தை வலியுறுத்தவும் இந்தக் கருத்தரங்கு உதவியது,” என்றார், நிகழ்ச்சி மற்றும் இயக்க நிர்வாகி சையட் அலி ஃபாத்திமா.