இசைமூலம் அந்திமகாலப் பராமரிப்புக் குறித்து விழிப்புணர்வு

இசைமூலம் அந்திமகாலப் பராமரிப்புக் குறித்து விழிப்புணர்வு

2 mins read
5a5af1b8-0172-4f0c-acbf-0a71a931b5a1
- என்டியு

சிங்கப்பூர் மக்கள்தொகை மூப்படைந்துவரும் வேளையில், வீடுகளில் அதிகம் பேசப்படாத தலைப்புகளுள் ஒன்று, அந்திமகாலப் பராமரிப்பு.

நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்படும் முதியவர்கள் வாழ்வின் விளிம்பில் உள்ளனர். பெரும்பாலானோருக்கு அந்திமகாலப் பராமரிப்பு என்றாலே, அச்சமும் துக்கமும் அவர்களை ஆட்கொண்டுவிடுகிறது. 

முதியவர்களின் அந்திமகாலப் பராமரிப்பில் குடும்பத்தினர், மருத்துவர்கள், குறிப்பாக அவர்களை கண்ணுங்கருத்துமாகக் கவனித்துக்கொள்ளும் பராமரிப்பாளர்களின் கடமைகள் முக்கியப் பங்காற்றுகின்றன. 

முதியவர்களின் கடைசிக் காலம் கண்ணியமாக அமைவதற்கு இசை ஒரு சிறந்த கருவி என்பதைப் பறைசாற்றும் விதமாக, மாணவர்களால் நடத்தப்படும் ‘புரோஜெக்ட் கிஃப்ட் ஆஃப் சோங்’ எனும் அமைப்பு நிறுவப்பட்டது.

அந்த அமைப்பும் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் (என்டியு) பியானோ குழுவும் ‘ஆம்புலன்ஸ் விஷ் சிங்கப்பூர்’ என்னும் அறப்பணி அமைப்புடன் கைகோத்தது. அந்திமகாலப் பராமரிப்புக்கு இசை எவ்வாறு கைகொடுக்கிறது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இசை நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

அக்டோபர் 28ஆம் தேதி அரங்கேறிய இசை நிகழ்ச்சியில் என்டியுவின் இசைக் குழுவினரும் சீன இசைக்குழுவினரும் இதர இசைக் கலைஞர்களும் மேடையேற்றிய இசை மழையில் பார்வையாளர்கள் நனைந்தனர். அறப்பணி இசை நிகழ்ச்சியில் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கும் அவர்களின் பராமரிப்பாளர்களுக்கும் $50,000 நிதி திரட்டப்பட்டது. 

திரட்டப்பட்ட தொகை முழுவதும் அந்திமகாலப் பராமரிப்பில் இருக்கும் நோயாளிகளின் கடைசி ஆசைகளை நிறைவேற்ற உதவும் ‘ஆம்புலன்ஸ் விஷ் சிங்கப்பூர்’ அமைப்புக்குச் சென்றது.

என்டியுவில் கணினி அறிவியல் துறை இறுதியாண்டு மாணவரான சர்வேஷ் பன்னீர்செல்வம், கடந்த ஓராண்டாக பியானோ குழு உறுப்பினராக இருந்து வருகிறார். இசை நிகழ்ச்சியில் இரண்டு பாடல்களுக்கு முதன்முறையாக பியானோ வாசித்தவர்,   , “எனக்கு மிகவும் உற்சாகமாக உள்ளது. உன்னத நோக்கத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வு இது. அர்த்தமுள்ள நிகழ்வில் நான் பங்களித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்,” என்றார்.

‘புராஜெக்ட் கிஃப்ட் ஆஃப் சோங்’ அமைப்பின் நிறுவனரான லோ பெய் யீ, 21, என்டியுவில் மூன்றாமாண்டு மருத்துவ மாணவராவார். இசை நிகழ்ச்சியின் இணை ஏற்பாட்டாளராகிய லோ, “எமது அமைப்பின் முக்கிய நோக்கங்களில் ஒன்று, நோயாளிகள் இறப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே. அந்திமகாலப் பராமரிப்புக் குறித்துப் பலர் பேச விரும்புவதில்லை. ஆனால், இசைமூலம் அந்த எண்ணத்தைப் போக்க நாங்கள் முயன்று நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தோம்,” என்று கூறினார்.