உலகப் பொருளாதார நெருக்கடி 2008இல் உலகை உலுக்கிய சமயத்தில், இளையரின் நிதி பாதுகாப்பே நாடுகளின் எதிர்காலத்துக்கு மிக முக்கியம் என நிதி வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்தனர். இனி, வருங்காலத்தில் பொருளியல் விரிவடைவதோடு, புரிந்துகொள்வதற்குக் கடினமாகும் என்பதையும் உணர்ந்த வல்லுநர்கள் எல்லா நாட்டு மாணவர்களுக்கும் தொடர்ந்து நிதியறிவுக் கல்வி வழங்கப்பெறுவது அவசியம் என்னும் கருத்தையும் முன்வைத்தனர். எனினும், 2018 நிலவரப்படி ஏறக்குறைய 22% நாடுகளில் மட்டுமே மாணவர்களுக்குப் போதிய நிதியறிவுக் கல்வி வழங்கப்படுகிறது. பிற நாடுகளில், வெவ்வேறு கடன் வட்டி வகைகள் என்னென்ன, வங்கிக் கணக்குகளை எப்படி கையாள்வது ஆகியன பற்றிய பாடத்திட்டங்கள் இல்லை. இதனைப் பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு (ஓஇசிடி) கண்டறிந்தது.
2010க்குப் பிறகு பிறந்த ‘ஆல்ஃபா’ தலைமுறையினருக்கு நிதியறிவு மிக முக்கியமாகிறது. முழுக்க முழுக்க மின்னியல் உலகில் வளரும் முதல் தலைமுறையினர் இப்பிள்ளைகள். மின்நாணயங்களும், மின் பணப் பரிவர்த்தனைகளும் அவர்களைச் சூழ்ந்திருக்கின்றன. முன்புபோல நாணயங்களையும் பணநோட்டுகளையும் எப்போதும் ஏந்திச் செல்லவேண்டிய அவசியம் தற்போது இல்லை. கைத்தொலைபேசி, சமூக ஊடகங்கள், மின்னட்டை ஆகிய வழிகளின்மூலம் எளிதாகக் கட்டணம் செலுத்தும் முறைகள் உலகளவில் பரவலாகிவிட்டன. இதனால், பணத்தின் அருமை அவர்களுக்கு முந்தைய தலைமுறையினரைப் போல ஆழமாகத் தெரியாமல் போகலாம் எனக் கணிக்கப்படுகிறது.
இந்தத் தலைமுறையினர் ‘ஃபின்ஃப்ளுவென்சர்ஸ்’ எனப்படும் சமூக ஊடக நிதி ஆலோசகர்களைக் கேட்டு வளர்கின்றனர். இவர்களுள் பலர் உரிமம் பெறாதவர்கள் அல்லது சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் என்பதைப் பலரும் அறியவில்லை. இதனால், பணத்தைப் பெருக்கும் ஆர்வத்தில் பிள்ளைகள் வழிதவறிப் போகும் அபாயமும் உள்ளது.
தென்கிழக்காசியவில் ஆடை, ஆபரணங்கள், ஆடம்பரப் பொருள்கள் முதலியவை பெருகி வருகின்றன. அதிகளவில் இவை விற்பனையாகியும் வருகின்றன. தங்களின் வாழ்க்கைமுறையை உயர்தரமானதாக வெளிக்காட்டிக் கொள்ளவேண்டி இத்தகைய பொருள்களில் அதிகளவில் பணம் செலவிடும் போக்கைத் தென்கிழக்காசிய நாடுகளில் காண முடிகிறது. முக்கியமாக, நடுத்தர மக்கள் இத்தகைய பழக்கங்களில் அதிகம் ஈடுபட்டு வருவது கவலைக்குரியது.
நிதியறிவுக் கல்வியைப் பரவலாக்குவதற்கு ஒட்டுமொத்தச் சமூகமே தேவைப்படுகிறது. பெற்றோர்கள் வீடுகளில் பிள்ளைகளுக்கு இளம் வயதிலிருந்தே பணச் சேமிப்புக் குறித்த தகவல்களைப் புகட்டுவது அவசியம். அரசாங்கங்களும் இதற்கான போதிய வளங்களை ஒதுக்கவேண்டும். உதாரணத்திற்கு, மலேசிய அரசாங்கம் 2019இலிருந்து 2023ஆம் ஆண்டுவரை ஐந்து ஆண்டுகள் நீடிக்கும் நிதியறிவு மேம்பாட்டுத் திட்டத்தை மேற்கொண்டது. லாபநோக்கமற்ற அமைப்புகளும் வசதி குறைந்த ஆசிய நாடுகளில் வசிக்கும் மாணவர்களுக்குக் கைகொடுக்கவேண்டும். ‘ஜூனியர் அசீவ்மெண்ட்’ எனும் அமைப்பானது, ஆசிய நாடுகளில் உள்ள குறிப்பிட்ட தொடக்கப்பள்ளிகளில் தொண்டூழியர்களின் உதவிகொண்டு நிதிக்கல்வியை வழங்கி வருகிறது.

