ஒருவேளை தங்கள் பணியைத் திடீரென இழக்க நேர்ந்தால், தங்களின் தற்போதைய வாழ்க்கைமுறையைத் தொடர்ந்து மேற்கொள்வதில் சிங்கப்பூரர்கள் பலரும் சிரமப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆறு மாதங்களுக்குப் பிறகும் அத்தகைய வாழ்க்கைமுறையைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வதற்குத் தேவையான நிதிச் சேமிப்பு, சிங்கப்பூரர்கள் பலரிடம் இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது.
2020ஆம் ஆண்டில் நோய்ப்பரவல் காலத்தில் நடத்தப்பட்ட ஓசிபிசி ஆய்வு, சிங்கப்பூரர்களின் சேமிப்புப் பழக்கங்களை ஆராய்ந்தது. மாதம் $2,000க்கும் மேல் சம்பாதிக்கும் 21முதல் 65 வயதுவரையிலான வேலை செய்யும் 1,000 பெரியவர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கொரோனா கிருமித்தொற்று நெருக்கடியால் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாகக் குடியிருப்பாளர்களின் நிதி நிலைமை எப்படி உள்ளது என்பதைக் கண்டறிய இந்த ஆய்வு நடத்தப்பட்டது என்று ஓசிபிசி வங்கி தெரிவித்தது.
வேலை செய்யும் சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள் ஆகியோர் இந்த ஆய்வில் கலந்துகொண்டனர். இந்தப் பிரிவில் மூவரில் இருவருக்கு அடுத்த ஆறு மாதங்களுக்குப் பிறகும் தங்களின் வழக்கமான வாழ்க்கைமுறையைத் தொடர்வதற்குப் போதிய சேமிப்பில்லை என்று இந்த ஆய்வு கண்டறிந்தது. இவர்களில் பாதிப் பேர் சம்பளக் குறைப்பாலும் சம்பளமில்லா விடுப்பாலும் தரகுக்கட்டண வருமானக் குறைப்பாலும் அவதியுற்றனர்.
ஆய்வில் பங்கேற்ற பாதிப் பேர் தங்கள் சேமிப்பின் பெரும்பகுதி செலவாகிவிட்டது என்றும், ஏறக்குறைய 20 விழுக்காட்டினர் தங்கள் சேமிப்பு 20 விழுக்காட்டுக்கும் மேல் குறைந்துவிட்டது என்றும் தெரிவித்தனர். மூவரில் ஒருவர் தங்களின் சேமிப்பு 20 விழுக்காடுவரை குறைந்துள்ளது என்று கூறினார். இன்னொரு 20 விழுக்காட்டினர் தங்கள் சேமிப்பை நல்ல முறையில் கட்டிக்காத்து வருவதாகப் பகிர்ந்துகொண்டனர். பங்கேற்றவர்களில் ஐந்து விழுக்காட்டினர் தங்கள் சேமிப்பு முன்பைவிட 20 விழுக்காட்டுக்கு மேல் அதிகரித்துள்ளது என்றும் எஞ்சியுள்ள 20 விழுக்காட்டினர் தங்கள் சேமிப்பு 20 விழுக்காடுவரை உயர்ந்துள்ளது என்றும் கூறினர். கொரோனா கொள்ளைநோய் வயது வாரியாக வெவ்வேறு பிரிவினரை வெவ்வேறு விதத்தில் பாதித்திருப்பதால், தங்கள் ஓய்வுகாலத் திட்டங்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பலர் கருத்துத் தெரிவித்தனர். பணவீக்கம், வேலைநீக்கம் ஆகியவை தலைதூக்கிய கொரோனா காலத்தில், பலரும் சேமிப்புகளைப் பெரிதும் நம்பி இருந்த போக்கு, பரவலாக இருந்தது.
ஆய்வில் பங்கேற்ற 40முதல் 54 வயதுவரை உள்ளவர்களில் மூன்றில் ஒருவர் தங்கள் ஓய்வுக்காலச் சேமிப்பைக் குறைத்துக்கொண்டதாகவும், நிதித் திட்டங்களில் சேர்ந்திருக்கும் 20களில் உள்ளோரில் 23 விழுக்காட்டினர் தங்கள் ஓய்வுக்காலத்துக்காக அதிகத் தொகையை ஒதுக்கி வைத்திருப்பதாகவும் கூறினர். இருப்பினும், அடுத்த ஆறு மாதங்களில் நிலைமை மேம்படும் என்று ஆய்வில் பங்கேற்றவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.