சிங்கப்பூரில் 2022ஆம் ஆண்டின் முதல் பாதியில் மோசடிச் சம்பவங்கள் குறித்து 14,349 புகார்கள் அளிக்கப்பட்டன. இந்த மோசடிகளில் $346.50 மில்லியன் பறிபோனது. 10 வகையான மோசடிகளில் மட்டும் பொதுமக்கள் $227.80 மில்லியன் இழந்தனர். மோசடிக் குற்றங்களை எதிர்ப்பதில் விழிப்புணர்வை ஏற்படுத்த ‘ஸ்கேமினார்’ கருத்தரங்கு இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் நடைபெற்றது. உள்துறை துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசுகையில், ஐந்தாண்டுகளில் இணைய மோசடிப் புகார்கள் நான்கு மடங்கிற்கும் மேல் அதிகரித்துள்ளதாகக் கூறினார்.
சமுதாய, குடும்ப மேம்பாட்டுத் துணை அமைச்சருமான அவர், 2017முதல் 2021வரை நடைபெற்ற 60,000 இணைய மோசடிச் சம்பவங்களில் ஒரு பில்லியன் வெள்ளிக்கும் மேற்பட்ட தொகையைச் சிங்கப்பூர் மக்கள் இழந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். நேரடியாக நடைபெறும் குற்றங்கள் குறைவாக இருக்கும் நிலையில், இணைய மோசடிகள்தான் தற்போதைய தலையாய பிரச்சினை என்று அவர் தெரிவித்தார். இணைய மோசடிகளைத் தடுப்பது ஒட்டுமொத்தச் சமூக முயற்சி என்றும் அவர் கூறினார்.
அதற்கிணங்க, நிகழ்வை முடித்து வைத்த தேசிய குற்றவியல் தடுப்பு மன்றத்தின் தலைவர் திரு ஜெரால்ட் சிங்கம், இணைய மோசடிகளுக்கு எதிரான தடுப்பூசி எதுவும் இல்லை என்றும் இணைய மோசடிகளை ஒழிப்பதற்கு நாமும் நமது சுற்றத்தாரும் மோசடிக்கான வாய்ப்புகளை ஒழிப்பதே தீர்வாகும் என்றும் கூறினார்.
“பணப்பையைத் தாண்டி, இணைய மோசடியானது மனத்தையும் தாக்க வல்லது. ஒருவர் பாதிக்கப்படுவது, அனைவரும் பாதிக்கப்படுவதற்குச் சமம்,” என்றார் திரு ஜெரால்ட். உருமாறிக்கொண்டே இருக்கும் இணைய மோசடி வகைகளுக்கும் போக்கிற்கும் ஏற்ற நவீனத் தீர்வுகளை ஊடகங்களும் வங்கிகளும் தொடர்ந்து வடிவமைக்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
நம்மையும் பிறரையும் காத்துக்கொள்ள மூன்று முக்கிய வழிமுறைகளைக் குறிக்கும் ‘ACT’ எனும் சுருக்கப்பெயர் இக்கலந்துரையாடல்களில் விளக்கப்பட்டது. இதன்படி, தனிப்பட்ட கணக்குகளில் ஸ்கேம்ஷீல்ட், ‘2FA’ எனும் இருபடிச் சரிபார்ப்பு ஆகிய பாதுகாப்பு அம்சங்களை சேர்த்துக்கொள்வது முதலில் அவசியம். அடுத்து, இணைய மோசடிக்கான அறிகுறிகளைக் கூர்ந்து, நிதானித்துக் கவனிக்கவேண்டும். தனிப்பட்ட விவரங்களுக்கான கோரிக்கைகள், பணப் பரிவர்த்தனைகள், இணைய வர்த்தகப் பொருள்களின் நம்பகத்தன்மை முதலியவை இதில் அடங்கும்.
கடைசியாக, இணைய மோசடி ஏற்படின், வங்கியிடமோ ஸ்கேம்ஷீல்டிலோ காவல்துறையினரிடமோ உடனடியாகப் புகார் அளிப்பது அவசியம். இத்தகைய வழிமுறைகளையும் மோசடிகளைக் கையாளும் உத்திகளையும் கொண்டுள்ள ‘லெட்ஸ் ஆக்ட் அகைன்ஸ்ட் ஸ்கேம்ஸ்’ எனும் மின்னூலின் வெளியீட்டை இந்நிகழ்வு கண்டது.
இதில், இணைய மோசடிகளால் பாதிக்கப்பட்டோரின் உண்மையான அனுபவங்களையும் பொதுமக்கள் படித்து அறிந்துகொள்ளலாம். இணைய மோசடிகள் குறித்த வளங்கள் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கும் https://go.gov.sg/actagainstscams தளத்தில் இந்நூலை மக்கள் படிக்கலாம்.

