அமைச்சர் இந்திராணி: நிதி அறிவு பெண்களுக்கு முக்கியம்

அமைச்சர் இந்திராணி: நிதி அறிவு பெண்களுக்கு முக்கியம்

2 mins read
144e24eb-b0f3-441b-a715-81b34f37de05
- Pixabay
Google News Preferred Icon

பெண்கள் தங்கள் விருப்பதிற்கேற்ப முடிவெடுப்பதற்கும் நிதி சார்ந்த சுதந்திரம் பெறுவதற்கும் நிதித்துறை பற்றிய அறிவு அவசியம் என்று கூறினார் அமைச்சர் இந்திராணி ராஜா. இவர் பிரதமர் அலுவலக அமைச்சரும் தேசிய வளர்ச்சி, கல்வி, நிதி இரண்டாம் அமைச்சரும் ஆவார். ‘மணி ஐடியாஸ்’ எனும் நிதியறிவுப் பயிலரங்கில் பேசியபோது அவர், இக்கருத்தினை வலியுறுத்தினார். 

அமைச்சர் இந்திராணி ராஜா நிதித்துறை அறிவு எல்லா வயதினருக்கும் எவ்வாறு பொருந்தும் என்பதைப் பகிர்ந்துகொண்டார்.  சிங்கப்பூரில் 80 விழுக்காட்டினர் ஏதோ ஒரு வகையில சேமிப்புகளையோ அவசர நிதியையோ ஒதுக்கத் திட்டமிட்டுள்ளார்கள் எனப் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. இத்தகவல் தமக்கு மனநிறைவை அளிப்பதாக அமைச்சர் கூறினார். 

சிறுவயதிலிருந்தே சேமிப்புத் திட்டங்களைப் பிள்ளைகளிடம் அறிமுகப்படுத்துவது வாழ்நாள் முழுவதும் அவர்களுக்குப் பயனளிக்கும் என்றும் அவர் கூறினார். ஏனெனில், சேமிப்புகளைச் விவேகமாகச் செலவிடுவதும் கணக்கு வைத்துக்கொள்வதும் பதின்ம வயதினருக்கு வருங்காலத்தில் நிதி சார்ந்த முடிவுகளை எடுக்க உதவும் என அவர் வலியுறுத்தினார். 

புதிதாக வேலையில் சேர்ந்துள்ள இளையர்கள் தங்களின் சேமிப்புகளைத் தொடக்கத்திலிருந்தே பெருக்கத் திட்டமிடுவது அவசியம். மேலும், சுயமாக நிதி வசதிகளைத் தாமாகவே அமைத்துக்கொண்டு மற்றவர்களைச் சார்ந்திருப்பதைப் பெண்கள் தவிர்க்கவேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். 

சிங்கப்பூரைப் பொறுத்தவரை ஆண்களைவிடப் பெண்கள் நீண்ட ஆயுளைக் கொண்டுள்ளதைப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இதனால், பெண்கள் நிதி சார்ந்த சுதந்திரம் பெற்றுச் சுயமாகத் தங்களைத் தாங்களே பார்த்துக்கொள்ளும் ஆற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் இந்திராணி தெரிவித்தார். இல்லையெனில், பெண்கள் அதிகளவில் சிரமப்படக் கூடும்.  ஒவ்வொருவரும் தங்கள் நிதி வசதிக்கேற்பச் செலவிடுவது, மத்திய சேம நிதியைப்பற்றி அறிந்துகொள்வது, மேற்படிப்புக்காகத் திட்டமிட்டுவது, ஒய்வுபெறும் காலத்திற்குத் தேவையான நிதியை ஒதுக்குவது முதலியவற்றின் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார். இவையே முழுமையான, மகிழ்ச்சியான, உளைச்சலற்ற வாழ்க்கைக்கு இட்டுச்செல்லும். 

சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் (சிண்டா) நிதியறிவு சார்ந்த சமூக நிகழ்ச்சிகளையும் மாணவர் பயிலரங்குகளையும் நடத்தி வருகிறது. சேமிப்புப் பழக்கங்கள், பண முதலீடு, இணையத்தில் எந்தத் தளங்களை நம்பலாம், முதலியவை குறித்து இந்த நிகழ்ச்சிகள் விழிப்புணர்வு ஊட்டுகின்றன. அவற்றில் அனைத்து வயதுடையோரும் பங்குகொண்டு முழுமையான பயன்பெற அமைச்சர் இந்திராணி ராஜா ஊக்குவித்தார்.