நாட்டின் சேமிப்பு போனால் வராது: பிரதமர் லீ விளக்கம், எச்சரிக்கை

நாட்டின் சேமிப்பு போனால் வராது: பிரதமர் லீ விளக்கம், எச்சரிக்கை

2 mins read
39d3aa10-533c-49fb-88c6-703792ee9a64
- தொடர்பு, தகவல் அமைச்சு

சிங்கப்பூரின் சேமிப்பு போய்விட்டால் திரும்ப வராது என்று பிரதமர் லீ சியன் லூங் எச்சரித்துள்ளார்.

சிங்கப்பூர், 50 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தது போன்று இப்போது இல்லை. அந்தக் காலக்கட்டத்தில் வலுவான வளர்ச்சி இருந்தது. எதிர்காலத்திற்குச் சேர்த்து வைக்க முடிந்தது என்று திரு லீ ஒரு பேட்டியில் விளக்கினார்.

இன்று சிங்கப்பூர் முன்புபோல் ஏழ்மை நிலையில் இல்லை. வருமானம் அதிகரித்து இருக்கிறது. வாழ்க்கைத்தரம் மேம்பட்டு இருக்கிறது. அதேவேளையில், மக்களின் எதிர்பார்ப்புகளும் தேவைகளும் அதிகரித்து உள்ளன என்பதைத் திரு லீ சுட்டிக்காட்டினார். 

ஆகையால், நாட்டின் சேமிப்பை உருவாக்கி பலப்படுத்துவது என்பது மிகச் சிரமமானது. அப்படிச் சிங்கப்பூர் தனது சேமிப்பைப் தொடர்ந்து வலுப்படுத்தி வந்திருப்பது குறித்துத் தாம் பெருமைப்படுவதாகக் குறிப்பிட்டார் திரு லீ.

சேமிப்பு கையைவிட்டுப் போனால் போனதுதான். ஒருபோதும் திரும்பாது என்று அவர் எச்சரித்தார். சிஎன்ஏவுக்குச் சிங்கப்பூரின் சேமிப்புப்பற்றி பிரதமர் ஜூன் 8ஆம் தேதி பேட்டி அளித்தார். ‘சிங்கப்பூர் சேமிப்பு வெளிப்பாடு’ என்ற தலைப்பிலான அந்தப் பேட்டியின்போது பல கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார். 

சேமிப்பு என்பது சிரமமான காலத்தில் ஓர் அனுகூலமாக, வசதியானதாக இருக்கும் என்று திரு லீ தெரிவித்தார். அதுவே அரசாங்கத்திற்கு நம்பிக்கையை அளிக்கிறது. அதேவேளையில், நம்முடைய முன்னோடிகள் செய்த தொண்டுகளையும் அது நினைவுபடுத்துகிறது. வருங்காலத் தலைமுறையினர் தொடர்பில் நமக்குள்ள பொறுப்புகளையும் அது நினைவூட்டுகிறது என்று திரு லீ குறிப்பிட்டார். 

சேமிப்பு நிதி போதுமா என்பதன் தொடர்பில் பதிலளித்த திரு லீ, பெரும்பாலான சூழ்நிலைகளைச் சமாளிக்கப் போதுமான சேமிப்பு சிங்கப்பூரிடம் இருக்கிறது. இருந்தாலும்கூட, அந்தச் சேமிப்பு எப்போதுமே இருந்து வரும் என்று நினைப்பது சரியல்ல என்றார் அவர். எதிர்காலம் என்பது கணிக்க முடியாத ஒன்று என்ற திரு லீ, பலவும் தவறாகப் போய்விடக்கூடும் என்று எச்சரித்தார்.

நீண்டகாலக் கண்ணோட்டத்தில் பார்க்கையில், உலகம் அமைதியாக, நிலையாக இருந்துவரும் பட்சத்தில் போதுமான சேமிப்பு இருக்குமா என்றால், இருக்கும் என்பதே தமது நம்பிக்கை எனத் திரு லீ கூறினார். எல்லாச் சூழ்நிலைகளிலும் போதிய அளவுக்குச் சேமிப்பு இருக்குமா என்பது தெரியாது. சிங்கப்பூரர்களின் சார்பில் அரசாங்கம் கவலைப்பட வேண்டி இருக்கின்ற ஓர் அம்சம் இது என்றார் பிரதமர்.

சிங்கப்பூரர்கள் சேமிப்பைச் சிரமமான காலத்தில் பயன்படக்கூடிய நிதி என்று பார்க்க வேண்டும் எனப் பிரதமர் குறிப்பிட்டார். சிரமம் இல்லை என்றால் அதனைத் தொடக்கூடாது. நல்ல காலத்தில் சேமிப்பைப் பலப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார். இப்படிச் செய்வதன்மூலம் இப்போதைய தலைமுறையைவிட அடுத்த தலைமுறை மேலும் பாதுகாப்புடன் இருக்க முடியும் என்றார் திரு லீ.

கொவிட்-19 தொற்றுக் காலத்தின்போது அரசாங்கத்திற்கு $40 பில்லியனுக்கும் மேற்பட்ட தொகையைச் சேமிப்பிலிருந்து எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அப்படி எடுத்த தொகையைத் திரும்பச் சேமிப்பில் செலுத்திவிட முடியும் என்று தாம் எண்ணவில்லை என்றார் திரு லீ.