பழங்காலத்தின் அபார கட்டிடக் கலை

2 mins read
93624707-5a0a-4d21-af39-38651ddee3eb
- Tamil Murasu

பண்பாடும் வரலாற்றுப் பெருமைகளும் தமிழ்நாட்டில் செழிக்கின்றன. தமிழ்நாட்டுக்கு அழகு சேர்க்கும் வியப்புமிகு கட்டிடங்களில் பல, தமிழ்நாட்டு மன்னர்களால் பழங்காலத்தில் எழுப்பப்பட்டவை. கோயில்கள் முதலிய வழிபாட்டுத் தலங்களும் கோட்டைகளும் இதில் அடங்கும். 

தஞ்சாவூரில் அமைக்கப்பட்ட பிரகதீசுவரர் கோயில் தமிழர் கட்டிடக் கலையின் தலைமணியாக விளங்குகிறது. இது ‘தஞ்சை பெரிய கோயில்’ எனப் பிரபலமாக மக்களிடையே அறியப்படுகிறது. முதலாம் இராசராச சோழரால் இந்த ஆலயம் 11ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 216 அடி உயரமான இதன் மாபெரும் கோபுரம் உலகின் முதல் கருங்கல் கோயில் கோபுரமாகும். கட்டிடக்கலையோடு சிற்பக்கலை, ஓவியக்கலை முதலியவற்றில் தமிழர்களின் பெருமையைப் பறைசாற்றுகிறது இக்கோயில். 

இக்கோயிலில் பழங்காலத் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ள பல கல்வெட்டுக்களை மக்கள் காணலாம். கோயில் அமைப்பு, கோயில் இயக்கங்கள், முறையாகக் கொண்டாடப்பட வேண்டிய விழாக்கள், ஆகியவை பற்றிய தகவல்கள் இந்தக் கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன. இவற்றை ஆராய்ந்து சோழர்களின் வாழ்க்கைமுறையை ஆய்வாளர்கள் புரிந்துகொள்ள முயல்கின்றனர். 

மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம், மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் ஆகியவையும் தமிழ்நாட்டு மன்னர்களால் கட்டப்பட்டு உலகப்புகழ் பெற்றுள்ளன. ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், மற்றும் பண்பாட்டு அமைப்பு (யுனெஸ்கோ) இந்த ஆலயங்களைப் பாதுகாத்து வருகிறது. 

ஆலயங்களைத் தவிர்த்து, சோழர்கள் கட்டிய கல்லணை பல்லாயிரம் ஆண்டுகள் கழித்து இன்றும் உறுதியாக நிற்கிறது. கரிகாலன் என்ற சோழ மன்னரால் முதலாம் நூற்றாண்டில் எழுப்பப்பட்ட இந்தக் கல்லணையின் நீளம் 1080 அடி, அகலம் 66 அடி. 

காவிரி ஆற்றில் அடிக்கடி பெருவெள்ளம் வந்த சமயத்தில் மக்கள் பாதிக்கப்பட்டதைக் கண்டார் கரிகால் சோழர். அதனால் அதிக வெள்ளப்பெருக்கைத் தடுக்கும் நோக்கத்தில் இந்தக் கல்லணையைக்  கட்டினார். சாதாரணக் காலங்களில் ஆழமாகவும் வேகமாகவும் ஓடும் கொள்ளிடம் என்னும் ஆற்றிலிருந்து காவிரி நீரைத் தடுத்து வைப்பதுதான் கல்லணையின் முக்கியச் செயற்பாடு. ஆனால், வெள்ளம் வந்தால் அதைப் பாதுகாப்பாகக் காவிரியிலிருந்து கொள்ளிடத்தில் திருப்பிப் பின்னர்க் கடலில் கொண்டு சேர்க்க வழி செய்வதும் இந்தக் கல்லணைதான்.   தமிழ் மன்னர்கள் பல அரிய, பிரமிக்கத்தக்க கட்டடங்களைத் தங்களின் வாழ்நாளில் உருவாக்கி உள்ளனர் இக்கட்டடங்கள். வரலாற்றில் முக்கிய இடம் பெறுவதோடு, தொடர்ந்து தமிழர் பாரம்பரியத்தை உலகெங்கும் பரப்பி வருகின்றன.