கடையெழு வள்ளல்கள் என்போர் தமிழ் இலக்கியத்தில் இடம்பெறுகின்றனர். இவர்கள் யாவரும் தமிழ்நாட்டு மன்னர்கள் ஆவர். சங்ககாலத்தில் மன்னர்கள் பலர் கொடைத்தன்மையுடன் இருந்தனர் என்பதையும், மக்களின் தேவை அறிந்து பொதுநலத்துடன் செயற்பட்டனர் என்பதையும் காட்டுகின்றன இந்த வள்ளலகளின் கதைகள்.
பேகன், பாரி, காரி, ஓரி, அதியமான், ஆய், நல்லி ஆகியோர் கடையெழு வள்ளல்கள் எனப் போற்றப்படுகின்றனர். இம்மன்னர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை அந்தக் காலத்தில் ஆண்டவர்கள். தங்களின் கொடைத்தன்மைமூலம் இவர்கள் மக்களின் மனங்களைக் கவர்ந்தனர்.
குளிரில் நடுங்கும் மயிலுக்குப் போர்வை வழங்கினார் பேகன். பழனி மலைக்குத் தலைவராக இருந்தவர். ஒருநாள் மயில் ஒன்று சத்தம் போட்டதைக் கேட்டு அது குளிரில் நடுங்குகிறது என எண்ணினார். எனவே, தம் போர்வையை அதன்மீது அதன்மீது போர்த்திவிட்டார். போர்வை மயிலுக்குப் பயன்படுமா என்றெல்லாம் எண்ணாமல், உடனே அச்செயலைப் புரிந்தார் பேகன்.
இதனை ‘கொடைமடம்’ எனப் புலவர்கள் கூறினார். மடமை என்பதற்கு அறியாமை என்று பொருள். அதாவது, இவருக்கு இதைத்தான் கொடுக்கவேண்டும் என்று எண்ணாமல் கிடைத்ததை நினைத்தபோதே கொடுப்பதுதான் இந்தப் பண்பு. கொடுக்கவேண்டும் எனத் தோன்றிய சமயத்தில் உடனே செயற்படுவதைக் கொடைமடம் எனும் சொல் குறிக்கிறது.
பறம்புமலை பகுதியை ஆண்டுவந்த பாரி மன்னர் முல்லைக் கொடி வாடி நிற்பதைக் கண்டு தம் தேரையே அதற்கு வழங்கினார். எதையும் பற்றிக்கொள்ளாமல் ஆடிக்கொண்டிருந்த முல்லைக் கொடியை வழியில் கண்டு அது பற்றிக்கொண்டு வளர்வதற்குத் தமது தேரை அங்கே நிறுத்திவிட்டுச் சென்றார். மன்னர் பாரியை மழையின் பொதுநலத்துடன் ஒப்பிட்டுப் பாடுகிறது புறநானூறு.
நீண்ட நாள் வாழ வைக்கக்கூடிய நெல்லிக்கனி ஒன்றை மன்னர் அதியமான் கண்டெடுத்தார். இக்கனியை உண்டோர் மூப்படையாமல் நீண்ட காலம் வாழ்வார்களாம். அதனைத் தாம் உண்ணாமல் புலவர் ஔவையாருக்குக் கொடுத்து மகிழ்ந்தார் அதியமான்.
இப்படி இந்த மன்னர்கள் ஆற்றிய அரிய செயல்கள் அவர்களின் பெருந்தன்மையையும் அவர்களுடைய இயற்கைக் குணத்தையும் போற்றுவதாக அமைந்திருக்கின்றன.
தேடி வந்து தங்களை வாழ்த்திச் செல்லும் புலவர்களுக்குப் பொன்னும் பொருளும் வழங்குவது மன்னர்களின் வழக்கமாக இருந்தது. தங்களிடம் உதவி கேட்டு வந்தோருக்கு இல்லை எனக் கூறாமல் தேவைப்பட்ட உதவிகளைச் செய்தனர் அக்காலத்து மன்னர்கள்.