நீதி தவறாத ஆட்சியே சிறந்தது

நீதி தவறாத ஆட்சியே சிறந்தது

3 mins read
13159957-4f80-4bc0-b64b-95794d56d988
- Wikipedia

தமிழ் மன்னர்கள் தங்களின் நீதி தவறாத போக்குக்காக அறியப்படுகின்றனர். பெரும்பாலும், நல்ல மனிதர்கள், நல்ல தலைவர்கள் ஆகியோருக்கான குணங்களைக் கொண்டோராகத் தமிழ் மன்னர்கள் மக்களின் நினைவில் உள்ளனர். இப்பண்புகளுள் முக்கியமானது, அனைவருக்கும் சமமான அளவில், நியாயமான முறையில் தக்க நீதி வழங்குவதே. 

இக்காலத்துச் சமூகம் பெரிதும் மாறியுள்ளது. ஆனால், சமூகத்தில் வெவ்வேறு பிரிவினருக்கு இடையே உள்ள வேறுபாடுகள் தொடர்ந்து இருக்கவே செய்கின்றன. ஏழை பணக்காரர் பிரிவு, செய்யும் தொழில்களுக்கு ஏற்பப் பிரிவு, எனப் பல வேறுபாடுகள் அன்றைய சமூகத்திலும் இருந்தன. அத்தகைய வேறுபாடுகளை மனத்திற்கொள்ளாமல் மக்கள் அனைவரையும் மன்னர்கள் சமமாகக் கருதவேண்டியிருந்தது.    

மனிதர்களை மட்டுமன்றி,   மிருகங்களையுங்கூடச் சமமாக நடத்துவது அவசியம் என உணர்த்தியவர் மனுநீதி சோழர். இவர் பாரபட்சமின்றித் தீர்ப்பு வழங்குபவர் என அனைவராலும் போற்றப்பட்டவர். யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் தம்மிடம் நேரில் வந்து முறையிடும் வசதியை அமைத்துக்கொடுக்க அவர் எண்ணினார். தம் அரசவைக்கு வெளியே பெரிய மணி ஒன்றினைக் கட்ட ஏற்பாடு செய்தார். ‘ஆராய்ச்சி மணி’ என அறியப்பட்ட இந்த மணியை அடிப்போரின் குறைகளையும் புகார்களையும் கேட்டு அதற்குத் தக்க தீர்ப்பு வழங்கி வந்தார் மனுநீதி சோழர். 

ஒருநாள் பசு ஒன்று ஆராய்ச்சி மணியை அடித்ததைக் கண்டார் மன்னர். தீர விசாரித்ததில், அப்பசுவின் கன்று ஒன்று சாலையில் தேரின்கீழ் அடிபட்டு மாண்டதை அறிந்துகொண்டார். இதில் சிக்கல் என்னவென்றால், அத்தேரை ஓட்டியது மனுநீதி சோழரின் சொந்த மகன் வீதிவிடங்கன். அவரின் தேர்ச்சக்கரத்தில் மாட்டியே அக்கன்று இறந்தது. 

மக்கள் அனைவரையும் வியக்க வைக்கும் முடிவாக இருந்தது மனுநீதி சோழரின் தீர்ப்பு. அவரின் அரசவையில் இருந்தோரையும் அது ஆச்சரியப்படுத்தியது. தம் மகனுக்கு மரண தண்டனை விதித்தார் மன்னர். மனுநீதி சோழர் தாமே தேரை ஓட்டிக்கொண்டு போய்த் தம் மகனைக் கொன்றதாக இலக்கியங்கள் கூறுகின்றன. கல்வெட்டுக்களிலும், பழங்காலத்து ஓவியங்களிலும் இந்த நிகழ்வுகள் பதிவாகி உள்ளன. 

எல்லாளன் என்ற உண்மை பெயர் கொண்டிருந்த அம்மன்னரை மக்கள் மனுநீதி சோழர் என அழைக்கத் தொடங்கினர். 

நீதிக்கும் நேர்மைக்கும் மற்றுமொரு சிறந்த சான்றாக இருப்பவர், பாண்டியன் நெடுஞ்செழியன். இவர் சிலப்பதிகாரத்தில் இடம்பெறுகிறார். தமது மனைவி கோப்பெருந்தேவியின் சிலம்பு ஒருநாள் காணாமல் போனவுடன், அதைப் போன்ற ஒரு சிலம்பை கையில் வைத்திருந்த கோவலனுக்கு மரண தண்டனை விதிக்கிறார் பாண்டியன். கோவலனின் மனைவியான கண்ணகியோ இதனை கேட்டுத் தவித்துப் போகிறாள். 

உடனே மதுரையிலுள்ள பாண்டியனின் அரண்மனைக்கு விரைந்து, தமது கணவரின் கையில் இருந்தது தமது சிலம்பு எனக் கூறுகிறாள். இதனை நிரூபிக்கத் தமது சிலம்பை உடைத்து, அதில் இருப்பது மாணிக்கங்கள் என காட்டும்போது அரசவையினர் அதிர்ச்சி அடைகின்றனர். ஏனெனில், ராணி கோப்பெருந்தேவியின் சிலம்பில் இருந்தவையோ முத்துகள். கோவலனைத் தவறுதலாகக் கொன்றுவிட்டது அனைவருக்கும் புலப்படுகிறது. தீர விசாரிக்காமல் தவறுதலாக நீதி வழங்கிய பாண்டியன்,   குற்ற உணர்ச்சியில்  உடனே உயிர் நீத்தான். 

இத்தகைய கதைகளும் நிகழ்வுகளும் நமக்கு அக்காலத்து மன்னர்களின் பண்புகளைக் காட்டுகின்றன. தற்போதைய சூழலுக்கும் பொருந்தும் பல படிப்பினைகளைத் தமிழ் மன்னர்கள் விட்டுச் சென்றிருக்கின்றனர்.