2020ஆம் ஆண்டில் ஒருமுறை சமூக ஊடகத்தில் செய்தி படித்துக்கொண்டிருந்தார் திரு சக்திபாலன் பாலதண்டாயுதம். அப்போது, ஒரு குறிப்பிட்ட பதிவு அவரின் கவனத்தை ஈர்த்தது. ரேயா எனும் குழந்தைக்கு அவசரமாகக் கல்லீரல் தேவைப்படுகிறது என ரேயாவின் பெற்றோர் பதிவிட்டிருந்தனர். கல்லீரலைத் தானம் செய்ய யாரேனும் முன்வர முடியுமா என அப்பெற்றோர் கேட்டிருந்தனர். ரேயாவுக்கு அப்போது ஒரு வயது.
உடனே, கல்லீரல் தானம் செய்வதுபற்றிச் சக்திபாலன் ஆராய்ச்சி செய்தார். அது பாதுகாப்பனதே என அவர் அறிந்துகொண்டார். எனவே, தமது கல்லீரலின் ஒரு பகுதியை ரேயாவுக்குத் தானம் செய்ய அவர் முடிவெடுத்தார்.
கல்லீரைலைத் தானம் செய்வதற்கு முன்னர் சக்திபாலன் பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளுக்குச் செல்லவேண்டி இருந்தது. அதற்குப் பின்னர், தம்முடைய கல்லீரலின் 23 விழுக்காட்டைக் குழந்தை ரேயாவுக்குத் தானம் வழங்கினார்.
அவரின் தன்னலமற்ற செயலைப் பாராட்டி இவருக்கு ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் 2021ஆம் ஆண்டுக்கான சிங்கப்பூரர்’ எனும் விருது அளிக்கப்பட்டது. அப்போதைய அதிபர் ஹலிமா யாக்கோப்பிடமிருந்து இந்த விருதை இவர் பெற்றுக்கொண்டார்.
பிறந்த சில வாரங்களிலேயே ரேயாவுக்கு biliary atresia எனக் கல்லீரலைப் பாதிக்கும் நோய் இருப்பது தெரியவந்தது. இதனால், கல்லீரல் செயலிழந்துவிடும் ஆபத்து இருந்தது.
முதன்முதலில் குழந்தை ரேயாவிற்கு இந்தச் சிக்கல் இருப்பது தெரிய வந்தபோது தாயார் திருமதி ருத்ரா வருத்தம் அடைந்தார். திருமதி ருத்ராவும் அவரின் குடும்பத்தாரும் தங்களின் கல்லீரலைப் பயன்படுத்த எண்ணினர். ஆனால், அவர்களுள் யாருடையதும் மருத்துவ ரீதியில் பொருந்தவில்லை.
கல்லீரல் தானம் முடிந்த பிறகு குழந்தை ரேயா விரைவில் நலமானாள். சக்திபாலன் ரேயாவுடனும், ரேயாவின் பெற்றோருடனும் நெருக்கமானார். குடும்ப உறுப்பினராகவே சக்திபாலன் ஆகிவிட்டதாகப் பகிர்ந்துகொண்டார் குழந்தை ரேயாவின் தாயார்.
உறுப்புத் தானத்தை ஆதரித்துவரும் திரு சக்திபாலன், உதவி தேவைப்படுவோருக்கு உதவ கூடுதலானோர் முன்வருமாறு கேட்டுக்கொள்கிறார். “கல்லீரல் தானம் செய்யும் ஒருவரைத் தேடும் குழந்தைநிலையில்யுடைய பெற்றோர் இருந்தனர். எனவே, அவர்களுக்கு முன்வந்து உதவுவதற்கு இதை ஒரு வாய்ப்பாக நான் கருதினேன்,” என்றார் சக்திபாலன்.

