சாதனைப் பொங்கல் நிகழ்வு

சாதனைப் பொங்கல் நிகழ்வு

2 mins read
9a086d59-fefb-4f21-9cb7-b0228d8103aa
- Keat Hong IAEC

கியட் ஹாங் இந்தியர் நற்பணிச் செயற்குழு 2023ஆம் ஆண்டில் பொங்கல் கொண்டாட்டச் சாதனை படைத்தது. குடியிருப்பாளர்கள், சமூகத்தினர் என 300க்கும் மேற்பட்டோர் இந்த விழாவில் கலந்துகொண்டனர். அதில் 294 பேர் ஒன்றாகப் பொங்கல் பானை வைத்துப் ‘பொங்கலோ பொங்கல்’ என்று சொல்லிப் புதிய சாதனை படைத்தனர். மொத்தம் 1,200 பேருக்கு வாழை இலையில் மதிய உணவும் பரிமாறப்பட்டது. 

இந்திய நாட்டுப்புறப் பாடகர்களும் நாதஸ்வர, தவில் இசைக் கலைஞர்களும் மக்களை மகிழ்வித்தனர். காவடியாட்டம், பொய்க்கால் குதிரை, மயிலாட்டம் ஆகியவற்றையும் மக்கள் கண்டு களித்தனர். குறிப்பாக, ஐந்தடுக்குத் தீக்கரகம் ஏந்தி ஆடிய இந்திய நடனமணியின் நடனத்தை மக்கள் பெரிதும் பாராட்டினர்.

- Singapore Book of Records

கியட் ஹாங் வட்டார மக்கள், வெளிநாட்டு ஊழியர்கள், சிறுவர்கள், பெரியோர்கள் எனப் பலரும் விழாவில் கலந்துகொண்டனர். பாரம்பரிய விளையாட்டுகளில் பங்கேற்று மக்கள் பரிசுகளும் வென்றனர். 

விழாபற்றி கருத்துத் தெரிவித்தது கியட் ஹாங் இந்தியர் நற்பணிச் செயற்குழு. கிராமங்களில் பொங்கல் விழா மிகப் பிரம்மாண்டமாக, இயற்கையுடன் கொண்டாடப்படுகிறது. அத்தகைய விழா உணர்வைக்  கியட் ஹாங் வட்டாரத்துக்குக் கொண்டு வரவேண்டும் என்பதே இவ்விழாவின் நோக்கமாக இருந்ததாகச் செயற்குழு கூறியது. 

இந்தக் குழு, கடந்த 2019ஆம் ஆண்டில் முதன்முதலாக இத்தகைய ஒரு சாதனையைப் படைத்தது. அவ்வாண்டில் 224 பேர் ஒரே இடத்தில் பொங்கல் பானை வைத்துப் பொங்கினர். அந்தச் சாதனையை விஞ்சும் வகையில் 2023ஆம் ஆண்டில் மொத்தம் 294 பேர் ஒன்றாகப் பொங்கல் வைத்தது புதிய சாதனையானது.

“சில ஆண்டுகாலமாய் கொவிட்-19 சூழலால் முழுமையாகச் சமூகத்தினருடன் இணைந்து பொங்கலைக் கொண்டாட முடியவில்லை. இந்தக் குறையைத் தீர்த்து வைக்க முயன்றோம். கொவிட்-19 காலத்துக்குப் பின்னர் மக்கள் பெரிய அளவில் ஒன்றுகூடிய ஒரு நிகழ்ச்சியாக இந்த ஆண்டின் பொங்கல் விழா அமைந்தது,” என்று செயற்குழுத் தலைவர் திரு அருமை சந்திரன் கூறினார்.